ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த விசிக பெண் கவுன்சிலர் வெட்டி படுகொலை!

102

விசிக பெண் கவுன்சிலர் கோமதி

சென்னை அருகே உள்ள திருநின்றவூர் பெரிய காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ். இவர் விசிக திருநின்றவூர் நகரச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார். இவரது மனைவி கோமதி, திருநின்றவூர் நகராட்சியின் 26-வது வார்டு கவுன்சிலராகவும், வரி விதிப்பு குழு சேர்மனாகவும் இருந்து வந்தார். ஸ்டீபன் ராஜுக்கும் கோமதிக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், இவர்களுக்கு நான்கு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு கோமதிக்கு, ஆண் நண்பர் ஒருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த  பழக்கம் நெருக்கமாகி, திருமணத்தை மீறிய உறவாக, மாறியதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம், கணவர் ஸ்டீபன் ராஜுக்கு தெரியவந்ததால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகத் தெரிகிறது.

 

101
ஸ்டீபன் ராஜ்

 

இந்தச் சூழலில், கோமதி தனது ஆண் நண்பருடன் திருநின்றவூர் ஜெயராம் நகர் பகுதியில் தனியாக நின்று பேசிக்கொண்டிருந்தார். இதனைக் கண்ட சிலர், ஸ்டீபன் ராஜுக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த ஸ்டீபன் ராஜ், மனைவி கோமதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆண் நண்பர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். அப்போது, ஸ்டீபன் ராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, கோமதியை சரமாரியாக வெட்டினார். இதில் கோமதியின் தலை, முகம், கழுத்து உள்ளிட்ட பல இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. மேலும்,  கோமதியின் கையும் துண்டிக்கப்பட்டது. ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த கோமதி, கணவரின் கண்முன்னே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து, ஸ்டீபன் ராஜ் அருகில் உள்ள திருநின்றவூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், கோமதியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசிக பெண் கவுன்சிலர், தனது ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது, கணவரால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Councillor police vck
இதையும் படியுங்கள்
Subscribe