VB G Ram G Bill passed amid strong opposition in lok sabha by Union government removes Gandhi's name
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் கடந்த 2005ஆம் ஆண்டு முதல், நாட்டில் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த திட்டத்தின் மூலம், ஒரு நபர் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 100 நாள் வேலை செய்யும் நடைமுறை இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் தொழிலாளர்களாக உள்ளனர்.
இந்த சூழ்நிலையில், மகாத்மா காந்தி பெயரில் உள்ள இந்த திட்டத்தை மாற்றம் செய்து ‘விக்ஸித் பாரத் ஜி ராம் ஜி’ என்ற பெயரில் புதிய திட்டத்தை பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தில், 90% நிதியை மத்திய அரசு இதுவரை வழங்கி வந்த நிலையில் இனி 60% மட்டுமே வழங்கும் எனவும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது. அதோடு 40% நிதியை மாநிலங்கள் ஏற்க வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த புதிய திட்டத்தில் 125 நாட்கள் வேலைவாய்ப்பை உறுதி செய்யப்படவுள்ளது. மகாத்மா காந்தி பெயரில் உள்ள இந்த திட்டத்தை மாற்றியமைத்து இந்தி மொழியில் பெயர் வைக்கப்படுவதாக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இதனிடையே, கடந்த 16ஆம் தேதி நாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கூடிய போது, மக்களவையில் ‘விக்ஸித் பாரத் ஜி ராம் ஜி’ என்ற புதிய திட்ட மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. அந்த மசோதா தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் இடையே கடந்த இரண்டு நாட்களாக இரவு பகலிலும் காரசார விவாதம் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், இந்த மசோதா இன்று (18-12-25) மக்களவையில் நிறைவேறியது. இந்த விவாதத்தில் 98 மக்களவை உறுப்பினர்கள் பங்கேற்று நேற்று நள்ளிரவு 1 மணி வரை பேசிய நிலையில், இன்று மத்திய வேளாண்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பதிலளிப்பார் என்றும் அதன் பிறகு மசோதா மீதான வாக்கெடுப்பு நடைபெறும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். அதன்படி, இன்று மக்களவை கூடியதும் இந்த புதிய மசோதா குறித்து மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பதிலளிப்பார் என அறிவித்த உடனேயே எதிர்க்கட்சி எம்.பிக்கள் எழுந்து நின்று அமளியில் ஈடுபட்டனர்.
இந்த மசோதா நிறைவேற்றக் கூடாது என்றும், நாடாளுமன்ற சிறப்புக் குழுவுக்கு இந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டு பரிசீலனை செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பிக்கள் கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து அவர்கள், சபாநாயகர் ஓம் பிர்லா இருக்கை முன்பு முற்றுகையிட்டு தொடர்ச்சியாக முழக்கங்களை எழுப்பிக் கொண்டே இருந்தனர். இருப்பினும், மத்திய வேளாண்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தனது பதிலை அளித்தார். அதன் பின்னர், மசோதா குறித்து குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மைக்கு தேவையான வாக்குகள் கிடைத்ததால் அந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது என சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்து மக்களவையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார்.
இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டதால், 100 சதவீத மத்திய அரசின் நிதி இனிமேல் 60 சதவீதமாக குறையும். மேலும், இந்த திட்டத்தில் மாநில அரசு 40 சதவீதம் பங்களிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 20 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயர் நீக்கப்பட்டு விபி-ஜி ராம் ஜி என்ற பெயரில் இந்த திட்டம் செயல்பட இருக்கிறது.
Follow Us