ஐ.பி.எஸ். அதிகாரியான வருண்குமாருக்கும், நா.த.க. தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானுக்கும் இடையே கடந்த சில காலமாகவே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கிடையே, தனக்கு எதிராக பொது வெளியில் சீமான் ஆதாரமின்றி அவதூறு கருத்துகளைத் தெரிவிப்பதால் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக ஐ.பி.எஸ். அதிகாரி வருண்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். மேலும், ரூ.2.10 கோடி மான நஷ்ட ஈடு கோரியிருந்தார்.

Advertisment

இதனைத் தொடர்ந்து, வருண்குமாருக்கு எதிராக சீமான் பேசுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஆனால், சீமான் தரப்பில் இருந்து பதில் மனு தாக்கல் செய்யப்படாததால், நீதிபதி வழக்கை அக்டோபர் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். மேலும், அதுவரை ஐ.பி.எஸ். அதிகாரி வருண்குமாருக்கு எதிராக சீமான் பேசுவதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை நீட்டிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.