மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த திமுக பிரமுகரான கதிரவன் என்பவரை, கடந்த 2012-ஆம் ஆண்டு ஒரு கும்பல் கடத்தி பணம் பறித்தது. இந்தக் கும்பல், திண்டுக்கல்லில் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் பதுங்கியிருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், திருப்பரங்குன்றம் போலீசார் திண்டுக்கல்லில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஏற்பட்ட மோதலில், போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த சினோஜ் என்பவர் என்கவுண்டரில் கொல்லப்பட்டார். அந்தச் சமயத்தில், அவருடன் இருந்த மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம், கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த அஜித் மற்றும் எர்ணாகுளத்தைச் சேர்ந்த வர்க்கீஸ் ஆகியோர் அங்கிருந்து தப்பித்தனர்.
பின்னர், போலீசார் நடத்திய தேடுதல் வேட்டைக்குப் பிறகு, இந்த வழக்கில் வரிச்சியூர் செல்வம், அஜித், வர்க்கீஸ் ஆகியோரைக் கைது செய்தனர். இந்த மூன்று பேர் மீதும், திண்டுக்கல் வடக்கு போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த நிலையில், அந்த வழக்கு திண்டுக்கல் 2-ஆவது மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வரிச்சியூர் செல்வம், வர்க்கீஸ் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகாததால், திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.
இதையடுத்து, கடந்த மாதம் வரிச்சியூர் செல்வம் போலீசாரால் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, மற்றொரு குற்றவாளியான வர்க்கீஸை, கடந்த 15-ஆம் தேதி கேரளாவில் வைத்து திண்டுக்கல் வடக்கு போலீசார் கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைத்தனர். இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்ட வர்க்கீஸுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையறிந்த சிறைக் காவலர்கள், வர்க்கீஸை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், வர்க்கீஸ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து திண்டுக்கல் மேற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சிறையில் அடைக்கப்பட்ட மறுநாளே வர்க்கீஸ் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.