திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியாருக்குச் சொந்தமான தங்கும் விடுதியில் கடந்த 2012ஆம் ஆண்டு கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு வரை 4 நபர்கள் கடத்தி வைத்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இது குறித்து திண்டுக்கல் மாவட்ட காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தனியார் தங்கும் விடுதியைச் சோதனை செய்தனர். அப்போது தமிழகத்தின் பிரபல ரவுடியும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவருமான வரிச்சூர் செல்வம், கேரள மாநிலத்தைச் சேர்ந்த சினோஜ் மற்றும் அவருடன் 2 அடையாளம் தெரியாத நபர்கள் இருந்தனர்.
இதனையடுத்து இந்த 4 பேரையும் பிடிப்பதற்காகக் காவல் துறையினர் தங்கும் விடுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் சினோஜ் என்பவர் என்கவுண்டரில் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் அவருடன் இருந்த வரிச்சூர் செல்வம் மற்றும் அடையாளம் தெரியாத 2 நபர்கள் தங்கும் விடுதியில் இருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து அவர்கள் 3 பேர் மீதும் ஆள்கடத்தல் கடத்தல் வழக்கின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இத்தகைய சூழலில் தான் அவர்களைக் கைது செய்ய உத்தரவிட்டு நீதிமன்றத்தின் மூலம் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
இதனையடுத்து வரிச்சூர் செல்வம் தலைமறைவாக இருந்த இடம் குறித்து திண்டுக்கல் நகர் வடக்கு காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மாவட்ட கண்காணிப்பாளர் எஸ்.பி. பிரதீப் உத்தரவின் பெயரில் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீசார் வத்தலக்குண்டு அருகே வரிச்சூர் செல்வம் தலைமறைவாக இருந்த இடத்திற்குச் சென்று கைது செய்தனர். திண்டுக்கல்லில் பிரபல ரவுடி வரிச்சூர் செல்வம் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.