ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சாத்தூர் கிராமத்தில் நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமில், உப்புபேட்டை கணபதி நகர் பகுதியைச் சேர்ந்த வெங்கடாபதி (வயது 60) என்பவர் தனது கோரிக்கை மனு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தார். மனு கொடுத்தபோது, உரிய ரசீது வழங்க வேண்டுமென அதிகாரிகளிடம் கோரியதாகவும், அப்போது கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ) ஷாபுதீன் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, முதியவரைத் தள்ளிவிட்டதாகவும் தெரிகிறது. இதில் வெங்கடாபதிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதையடுத்து, வெங்கடாபதி தன்னைத் தாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வட்டாட்சியரிடம் புகார் தெரிவித்தார். மேலும், தனது மனு மீதும், தன்னைத் தாக்கியவர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வெங்கடாபதியை வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயன்றனர். ஆனால், தன்னை வெளியேற்றவோ, தாக்கவோ யாருக்கும் அதிகாரம் இல்லை எனக் கூறி, போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு முற்றுகையிட்டதாகத் தெரிகிறது.
பின்னர், வெங்கடாபதி தன்னைத் தாக்கிய கிராம நிர்வாக அலுவலர் மற்றும் காவலர் மீது புகார் அளிக்க காவல் நிலையத்திற்குச் செல்வதாகத் தெரிவித்து அங்கிருந்து புறப்பட்டார். இச்சம்பவம் முகாமில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுக்குறித்து ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில், அரசுப் பணி செய்ய விடாமல் தடுத்ததோடு, வி.ஏ.ஓவை தாக்கினார். நீண்ட நேரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அவரை கட்டுப்படுத்தும் நோக்கில் குறைந்த அளவு பலத்தைக் கொண்டு எஸ்.ஐ பிரபாகரன் அமைதிப்படுத்தினார்,” என்று காவல்துறை தெரிவித்துள்ளது.