புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து மண், மணல் போன்ற கனிமக் கொள்ளைக்கு பஞ்சமில்லாமல் நடக்கிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் துணையோடு போலி ரசீதுகள் தயாரிக்கப்பட்டு, கிராவல் கடத்தல்கள் தொடர்கின்றன. இதில், ஆலங்குடி வட்டத்தில் வட்டாட்சியர் அலுவலக வாசல் வழியாகவே கிராவல் கொள்ளை இரவு பகலாக நடக்கிறது. அதேபோல், கறம்பக்குடி வட்டத்தில் தொடர்ந்து நடக்கும் மணல் கொள்ளை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. மணல் கொள்ளை நடக்கும் இடத்திற்கு வரும் அதிகாரிகளே கொள்ளையர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி, திருட்டு மணல் வாகனங்களை அனுப்பிவைக்கின்றனர் என்று சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.
இந்நிலையில், கறம்பக்குடி தாலுகாவில் உள்ள தீர்த்தான்விடுதி கிராமத்தில், ஒரு நிலத்திற்கு பட்டா மாறுதலுக்காக விவசாயி தேவதாஸ், கிராம நிர்வாக அலுவலர் ஜாஸ்மின் பானுவிடம் விண்ணப்பித்துள்ளார். அப்போது, பட்டா மாறுதலுக்கு ரூ.10,000 வேண்டும் என்று கிராம நிர்வாக அலுவலர் ஜாஸ்மின் பானு கறாராகக் கூறியதாகக் கூறப்படுகிறது.
ஆனால், தன் நிலத்திற்கு பட்டா மாறுதலுக்கான விண்ணப்பக் கட்டணம் செலுத்தியும், லஞ்சம் வேறு கொடுக்க வேண்டுமா என்று தேவதாஸ் நினைத்திருக்கிறார். இருப்பினும், லஞ்சம் கொடுத்தால் மட்டுமே வேலை நடக்கும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டதால், விவசாயி தேவதாஸ் சில நாட்களுக்கு முன்பு மீண்டும் கிராம நிர்வாக அலுவலரைச் சந்தித்து ரூ.4,000 கொடுத்திருக்கிறார். மீதிப் பணத்தை தீபாவளி முடிந்த பிறகு தருவதாகக் கூற, சரி என்று கிராம நிர்வாக அலுவலர் ஜாஸ்மின் பானு, வாங்கிய 4,000 ரூபாயையும் தன் பாக்கெட்டில் வைத்துள்ளார். அதனை விவசாயி தேவதாஸ் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, கிராம நிர்வாக அலுவலர் ஜாஸ்மின் பானு லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. அதன் அடிப்படையில், புதுக்கோட்டை கோட்டாட்சியர் ஐஸ்வர்யா, பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் ஜாஸ்மின் பானுவிற்கு தீபாவளி பரிசு வழங்கும் வகையில் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்த உத்தரவிட்டார். தற்போது, விவசாயி தேவதாஸ் தரப்பில் சமாதானம் பேசி, லஞ்சம் கொடுக்கவில்லை என்று வாக்குமூலம் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இதே தாலுகாவில் இதுபோன்ற ஏராளமான முறைகேடுகள் நடப்பதாகவும், உயர் அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இல்லையெனில், மணல் மாஃபியாக்களிடம் பேரம் பேசி பணம் வாங்கும் வருவாய்த் துறை அதிகாரி சம்பந்தமான வீடியோ பதிவுகளும் விரைவில் வெளிவரும் என்று கனிமவளக் கொள்ளைக்கு எதிரான சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.