தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டமன்றத் தொகுதி ஆவணம் பெரியநாயகிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது கசாலி (வயது 50). இவர் தனது நிலப் பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று 19ஆம் தேதி விண்ணப்பித்துள்ளார். பட்டா பெயர் மாறுதலுக்கு விண்ணப்பித்த முகமது கசாலி இது குறித்து பெரியநாயகிபுரம் கிராம நிர்வாக அலுவலர் கண்ணனைப் (வயது 54) தனது விண்ணப்பம் குறித்து கூறியுள்ளார்.
அப்போது, பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ. 2 ஆயிரத்து 500 பணம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத முகமது கசாலி, தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தில் இது பற்றி புகார் கொடுத்துள்ளார். தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலிசாரின் போலீசாரின் அறிவுறுத்தலின்படி இன்று (24.09.2025 - புதன்கிழமை) கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் இருந்த வி.ஏ.ஓ. கண்ணனிடம் பட்டா பெயர் மாறுதலுக்கு அவர் கேட்ட ரூ.2 ஆயிரத்து 500 பணத்தை லஞ்சமாக கொடுத்துள்ளார்.
அப்போது அந்தப் பகுதியில் மறைந்து நின்ற தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி. அன்பரசன், இன்ஸ்பெக்டர்கள் அருண் பிரசாத், பத்மாவதி ஆகியோர், கண்ணனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் சோதனை செய்த போது கணக்கில் வராத ரூ.25 ஆயிரம் பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.