Advertisment

“சனாதன எதிர்ப்பில் சமரசம் செய்யவே மாட்டோம்” - ராஜேந்திர பாலாஜிக்கு வன்னியரசு பதிலடி

rajvann

Vanniyarasu's said We will never compromise on the opposition to Sanatana response to Rajendra Balaji

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்த மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை நாளான 23ஆம் தேதி முதல் முப்பெரும் அரசு விழாவாக ராஜேந்திர சோழனால் வடிவமைக்கப்பட்ட சோழிஸ்வரர் ஆலய வளாகத்தில் கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு ராஜேந்திர சோழனின் 1000வது பிறந்த நாளான முப்பெரும் விழாவின் கடைசி நாளான நேற்று (27.07.2025) பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழ்நாடு அரசின் சார்பாக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சிவசங்கர் மற்றும் சிதம்பரம் மங்களை தொகுதி  எம்.பி., திருமாவளவன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

Advertisment

இதனிடையே, பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் திருமாவளவன் பங்கேற்றது அற்புதமான திருப்புமுனை என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். இது குறித்து சிவகாசியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ராஜேந்திர பாலாஜி, “தமிழ்நாட்டு மக்கள் மீது அளப்பரிய அன்பை பிரதமர் மோடி வைத்திருக்கிறா என்பது நிரூபணமாகியுள்ளது. அதிமுக - பா.ஜ.கவும் பலமாக இருக்கிறது என்பதற்கு அடையாளமாக எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடி சந்திப்பு இருந்திருக்கிறது. பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் திருமாவளவன் பங்கேற்றது என்பது அற்புதமான திருப்புமுனை. அவர் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் பிரதமரை வரவேற்றிருக்கிறார். தமிழக மக்கள் மீது பெருமையையும் புகழையும் பிரதமர் மோடி வைத்திருக்கிறார் என்று தெரிந்து அந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்ட சிறப்புக்குரியது” என்று கூறினார்.

Advertisment

இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் துணை பொதுச் செயலாளர் வன்னியரசு பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஜெயங்கொண்டம் சோழபுரத்தில் முதலாம் ராஜேந்திர சோழனின் ஆயிரமாவது பிறந்த நாள் விழாவில் இந்திய ஒன்றிய தலைமை அமைச்சர் என்ற முறையில் நரேந்திர மோடி அவர்கள் பங்கேற்றார். நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் எமது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பங்கேற்றார். இதில் எந்த அரசியலும் இல்லை. தொகுதியில் நடக்கும் அரசு விழாக்களில் பங்கேற்பது மரபாகவும் நாகரீக அரசியலாகவுமே விடுதலைச்சிறுத்தைகள் பார்க்கிறோம்.

ஆனால்,அதிமுக முன்னாள் அமைச்சர் திரு.ராஜேந்திர பாலாஜி “பிரதமர் மேடையில் திருமாவளவன் பங்கேற்றது அற்புதமான திருப்புமுனை” என்று சொல்லியிருக்கிறார். இதில் எந்த திருப்புமுனையும் இல்லை. விடுதலைச்சிறுத்தைகள் எப்போதும் சனாதன எதிர்ப்பில் சமரசம் செய்யவே மாட்டோம். சனாதனத்தை நிறுவ முயலும் பாஜகவுடன் அரசியல் ரீதியான எந்த உறவும் வைக்க மாட்டோம் என எமது தலைவர் பிரகடனப்படுத்திய பிறகும் ஒருவித குழப்பம் மற்றும் நம்பிக்கையற்ற சூழலிலே அதிமுக இருப்பதை ராஜேந்திர பாலாஜி உணர்த்துகிறார். எந்த மேடையில் நின்றாலும் சிறுத்தை சிறுத்தையாகவே களமாடுவோம். 2026 ல் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாத அளவுக்கு அதிமுக- பாஜக கூட்டணியை மக்கள் தோற்கடிப்பார்கள் என்பது உறுதி. தமிழ்நாட்டுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் துரோகம் செய்துவரும் அதிமுக- பாஜகவை ஒரு போதும் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்’ எனப் பதிவிட்டுள்ளார்.

Thirumavalavan K.T.Rajendra Balaji vanniarasu kt rajendra balaji
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe