ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் அறிமுகக் கூட்டத்தில் கட்சியின் மாநில துணைத்தலைவர் வன்னியரசு கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர், “நடிகர் விஜய்யும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் பாரதிய ஜனதா கட்சியின் இந்துராஷ்ட்ரிய மற்றும் சனாதன அரசியல் கனவுகளை மறைமுகமாக முன்னெடுக்கும் ஒட்டுக் குழல்களாக செயல்படுகின்றனர். அதனால் தமிழ்நாட்டின் இளைஞர்கள் இவர்களிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வரும் 25ஆம் தேதி தாய்த் தமிழ் காத்த போராளிகள் நினைவு நாள் விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கலந்துகொள்கிறார். பராசக்தி போன்ற திரைப்படங்கள் வெளிவருவதன் மூலம் மொழிப்போர்த் தியாகிகள் பற்றிய வரலாறு இன்றைய தலைமுறைக்கு தெரிய வருகிறது.
பாரதிய ஜனதா கட்சி, இந்து தேசியம் மற்றும் இந்து ராஷ்ட்ரியம் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறது. அதற்கு எதிராக தமிழகத்தின் அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைய வேண்டிய அவசியம் இருக்கிறது. இன்றும் இந்தியைத் திணிக்கும் முயற்சிகள் தொடர்கின்றன. தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் 2000 கோடி ரூபாய் வழங்கப்படும் என மத்திய அரசு நேரடியாக மிரட்டுகிறது. இதற்கு எதிராக யாரும் குரல் எழுப்பவில்லை. 2026 தேர்தல் என்பது டெல்லிக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான அரசியல் மோதலாக இருக்கும். நாம் தமிழர் கட்சி எடுத்துள்ள அரசியல், தமிழர்களுக்கு எதிரானதாக இருக்கிறது. அந்தக் கட்சி ஆர்.எஸ்.எஸ். சிந்தனையின் கிளையாக மாறிவிட்டது. பாஜக – அதிமுக கூட்டணி மக்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் எதிரான கூட்டணியாக மாறிவிட்டது.
தமிழ்நாடு சமூக நீதியை அடிப்படையாகக் கொண்ட தனித்துவமான மாநிலம். 2026 தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மைய அரசியலில் முக்கிய பங்கு வகிக்கும். இரட்டை இலக்க வெற்றியை நோக்கி பயணித்து வருகிறோம். ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என்பதே அடுத்த கட்ட இலக்கு. பாரதிய ஜனதாவையும் ஆர்.எஸ்.எஸ்.-ஐயும் அரசியல் ரீதியாக வீழ்த்துவதே எங்களது கட்சியின் நோக்கம். திராவிட மாடல் அரசு தமிழ்நாட்டில் தொடர வேண்டும். திராவிடம் இல்லாத தமிழ்நாடு, காங்கிரஸ் இல்லாத இந்தியா என்ற பாஜகவின் கனவை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒருபோதும் ஆதரிக்காது. பாமக இரு அணிகளாகப் பிரிந்திருந்தாலும், கோட்பாட்டு ரீதியில் இரண்டும் ஒன்றுதான். எங்களைப் பொருத்தமட்டிலும் சாதிவாதம் மற்றும் மதவாத அரசியலுடன் எந்தவித இணக்கமும் இல்லை” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/18/vanni-2026-01-18-11-04-02.jpg)