கோவை விமான நிலையம் அருகே, பீளமேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நேற்று (02.11.2025) இரவு ஆண் நண்பருடன் தனியார் கல்லூரி மாணவி ஒருவர் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 மர்ம நபர்களால் கல்லூரி மாணவி, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

Advertisment

அந்த வகையில் பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணியின் தேசிய தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளதில் வெளியிட்டுள்ள பதிவில், “நேற்றிரவு கோவை விமான நிலையத்தின் அருகே, சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் 3 பேர் கொண்ட கும்பலால் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம், ஆளும்  திமுக அரசின் மீது விழுந்த மற்றொரு கரும்புள்ளி. 

Advertisment

மக்களை பாதுகாக்க வேண்டிய காவல்நிலையங்கள் கட்டப்பஞ்சாயத்து நிலையங்களாகவும், குற்றங்களை தடுக்க வேண்டிய காவல்துறையினர் ஆளும் அரசின் ஏவல்துறையினராகவும் மாறிப் போனதன் விளைவு இது. திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து கணக்கிலடங்கா பாலியல் வன்கொடுமைகளை தமிழகம் கண்டிருந்தாலும், ஒவ்வொரு முறையும் நெஞ்சம் கனக்கிறது. பாதிக்கப்படும் பெண் பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து மனம் பதறுகிறது. இவ்வாறு தனது நாட்டுப் பெண்களை பாதுகாக்கத் தவறிய எந்த தலைவனையும் வரலாறு மன்னித்ததும் இல்லை, மறந்ததும் இல்லை. அந்த வகையில் ஆளத் தெரியாத அவலத்தின் சாட்சியாக முதல்வர் மு.க. ஸ்டாலின் வரலாற்றில் இடம் பெறுவார்” எனத் தெரிவித்துள்ளார்.