தமிழ்நாட்டு மக்கள் உதயநிதிக்கு தக்க பாடம் புகட்டுவார்கள் என பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணியின் தேசிய தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமீபத்தில் நூல் வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ‘செத்த மொழி சமஸ்கிருதத்திற்கு மத்திய அரசு அதிக நிதி ஒதுக்குகிறது. கோவை வந்த பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் மீது அக்கறை இருப்பது போல நாடகமாடுகிறார்’ என கூறியிருக்கிறார். இது கடும் கண்டனத்திற்குரியது. கலைஞரின் பேரன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகன் என்பதால் மட்டுமே, திமுக இளைஞரணிச் செயலாளர், துணை முதலமைச்சர் பதவியை பெற்றவர் உதயநிதி.
எந்தவித பின்னணியும் இல்லாமல் தனது உழைப்பு, அறிவாற்றல் தியாகத்தால் அரசியலில் யாரும் தொட முடியாத உயரத்தை அடைந்தவர் பிரதமர் மோடி. அவரை விமர்சிக்க உதயநிதிக்கு எந்த உரிமையும் இல்லை. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் 'உலகின் தொன்மையான மொழி தமிழ்' என முழங்கும் பிரதமர் மோடியை தமிழ் மீது பற்று கொண்டவர் போல நாடகமாடுகிறார் என கதை கட்டும் உதயநிதியை பார்த்து தமிழ்நாட்டு மக்கள் கைகொட்டி சிரிப்பார்கள். 'திராவிடம், திராவிடர், திராவிட மாடல்' என்ற சொல்லி, 'தமிழ், தமிழர், தமிழ்நாட்டின் அடையாளத்தை அழிக்கும் வேலையை ஒரு நூற்றாண்டாக திமுக செய்து வருகிறது.
தமிழ் மீது பற்று இருப்பது போல நாடகமாடி வருவது திமுகதான். பல்லாயிரம் ஆண்டுகள் பாரதத்தின் இணைப்பு மொழியாக இருந்த சமஸ்கிருதம், இந்தியாவின் ஆன்மிக மொழியாகவும் உள்ளது. அதனால்தான், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர், இந்தியாவின் தேசிய மொழி பற்றிய விவாதம் வந்தபோது, சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக அறிவிக்கலாம் என முன்மொழிந்தார். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட யாரும் எந்தவொரு மொழியையும் செத்த மொழி என்று அவமானப்படுத்த மாட்டார்கள். வாரிசு என்பதால் பதவிக்கு வந்தவர்களிடம் ஜனநாயகத்தன்மையை நிச்சயம் எதிர்பார்க்க முடியாது என்பதை உதயநிதி உறுதிப்படுத்தியிருக்கிறார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/22/udhay-dy-cm-2025-11-22-13-13-38.jpg)
தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளை தாய்மொழியாக கொண்டவர்கள் பல கோடிக்கணக்கில் உள்ளனர். அவர்களுக்கென்று தனி மாநிலம் உள்ளது. அந்த மொழிகளின் வளர்ச்சிக்கு அந்தந்த மாநில அரசுகள் பெரும் பங்காற்றுகின்றன. ஆனால், சமஸ்கிருதத்தை தாய்மொழியாக கொண்டவர்கள் பெரும் எண்ணிக்கையில் இல்லை. சமஸ்கிருதத்தை பிரதான ஆட்சி மொழியாக கொண்ட மாநிலங்களும் இல்லை. அதனால்தான் சமஸ்கிருதத்திற்காக மத்திய அரசு, அதிக நிதி ஒதுக்குகிறது. தமிழை விட உருது மொழிக்கு அதிக நிதியை மத்திய அரசு ஒதுக்குகிறது. செத்த மொழி என சமஸ்கிருதத்தை விமர்சித்த உதயநிதி, உருதுக்கு அதிக நிதி ஒதுக்கியதை வசதியாக மறைத்து விட்டார். மற்ற மொழிகளையும், மற்ற மொழி பேசுபவர்களையும் இழிவுபடுத்துபவர்கள்தான் பாசிச சக்திகள். தேசியத்தின் மீது நம்பிக்கை கொண்ட தமிழ்நாட்டு மக்கள் உதயநிதிக்கு தக்க பாடம் புகட்டுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
Follow Us