சிறுநீரக கடத்தல் விவகாரத்தில் தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணியின் தேசிய தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளதில் வெளியிட்டுள்ள பதிவில், “நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றுள்ள சிறுநீரகக் கடத்தல் சம்பவம் நாடு முழுவதையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. பள்ளிப்பாளையம், குமாரப்பாளையம், திருச்செங்கோடு போன்ற பகுதிகளில் விசைத்தறிகளில் பணியாற்றும் ஏழைத் தொழிலாளர்களை ஏமாற்றி, அவர்களின் சிறுநீரகங்களை 3 லட்சம் ரூபாய்க்கு வாங்கி 50 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யும் கொடூரச் செயலில் தனியார் மருத்துவமனைகளும் இடைத்தரகர்களும் ஈடுபட்டுள்ளனர்.
இது ஏழைகளின் வறுமையைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட மிகக் கேவலமான உடல் உறுப்பு மோசடியாகும். திமுகவைச் சேர்ந்த மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினருடன் தொடர்புடைய மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட சில மருத்துவமனைகள் இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில், தமிழக அரசு பாரபட்சமின்றி உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான தண்டனை நடவடிக்கைகள் எடுக்கப்படுவதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உரிய நிவாரணமாக குறைந்தபட்சம் தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடும், தேவையான மருத்துவ உதவிகளும் வழங்கப்பட வேண்டும்.
மேலும், எதிர்காலத்தில் இத்தகைய மோசடிகள் நடைபெறாமல் தடுக்க, உறுப்பு தானம் தொடர்பான நடைமுறைகளில் தமிழக அரசின் சுகாதாரத் துறை புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டும். மக்களைத் தேடி மருத்துவம், நலன் காக்கும் ஸ்டாலின் திட்டம் போன்ற பெயரளவிலான திட்டங்களை மட்டும் வைத்திருக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின், இத்தகைய மோசடிகளைத் தடுக்க உரிய கவனத்துடன் செயல்பட்டிருந்தால் இந்த சிறுநீரகக் கடத்தல் சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை. இந்தச் சம்பவத்தை திருட்டு என்று கூறாமல் முறைகேடு என்று அழைக்கச் சொல்லி, குற்றத்திற்கு புதிய விளக்கம் அளித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்தக் குற்றத்தைச் சரிசெய்ய என்ன நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. தமிழக அரசு இவ்விவகாரத்தில் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/08/02/vanathi-2025-08-02-11-36-57.jpg)