Van going to DMK conference overturns, causing accident Photograph: (dmk)
வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் பரபரப்பாகத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், திமுகவும் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக, பல்வேறு பொதுக்கூட்டங்கள், மாநாடுகள் போன்றவற்றைத் தொடர்ந்து நடத்தி வருகிறது.
அந்த வகையில், இன்று திருச்சி சிறுகனூரில் திமுக சார்பில் மாநில நிர்வாகிகள் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அம்மாநாட்டில் கலந்துகொள்ள தமிழகம் முழுவதும் உள்ள திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் திருச்சிக்குப் படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில், நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் தாலுகாவில் இருந்து 20க்கும் மேற்பட்ட தொண்டர்கள், அம்மாநாட்டில் கலந்துகொள்ள ஒரு வேனில் சென்றுள்ளனர். அந்த வேன் திருச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்த சமயத்தில் தஞ்சாவூர் அருகே விளார் புறவழிச்சாலையில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேன் கவிழ்ந்ததால், அதில் இருந்த 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் விபத்திற்குள்ளானவர்களை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆம்புலன்ஸ் மூலமாகக் கொண்டுசெல்லப்பட்ட அவர்களுக்கு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தஞ்சாவூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow Us