கடலூர் மாவட்டம் வடலூர் திருஅருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் திரு அருட்பிரகாச வள்ளலாரின் 203ஆம் வருவிக்க உற்றநாள் விழா நடைபெற்றது. இதில் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு கலந்துகொண்டு சன்மார்க்க கொடியினை ஏற்றி வைத்து, அன்னதானத்தை தொடங்கி வைத்தனர். இதனைதொடர்ந்து வள்ளலார் தெய்வ நிலையத்தில் பயன்படுத்தப்பட்ட வஸ்திரங்களை ஏழை எளிய பொதுமக்களுக்கு வழங்கினார்கள். அதனைத் தொடர்ந்து, வடலூர் சத்திய ஞான சபை அருகே சர்வதேச வள்ளலார் மையம் பி பிரிவில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டனர்.

Advertisment

இதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு மற்றும் வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கூட்டமாக  செய்தியாளர்களிடம்  பேசுகையில், “வள்ளலாரின் 203ஆம் வருவிக்க உற்றநாள் விழா இன்றைய தினம் கலந்து கொண்டு, சன்மார்க்க கொடியினை ஏற்றி வைத்து, அன்னதானத்தை தொடங்கி வைத்தோம். திருஅருட்பிரகாச வள்ளலார் அவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் இந்த ஆட்சி ஏற்பட்டவுடன், தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி, வடலூரில் வள்ளலார் சர்வதேச மையத்தை அமைப்பதற்கு ரூ.99.90 கோடியை அரசு நிதியாக வழங்கினார்கள். இந்த சர்வதேச மையம் அமைக்க பல்வேறு நீதிமன்ற வழக்குகளுக்கு பிறகு பி பிரிவு பகுதியில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு, வரும் டிசம்பர் மாதம் வள்ளலாரின் அருந்தவ சீடர்களுக்கு அர்ப்பணிக்கப்படும். மற்றொரு பகுதியான ஏ பிரிவில் கட்டுமானப் பணி மேற்கொள்வதற்கு வழக்கு நிலுவையில் இருப்பதால், நீதிமன்ற உத்தரவிற்கு பின் அந்த பணிகளும் மேற்கொள்ளப்படும்.

Advertisment

வள்ளலார்  இந்த நாட்டிற்கு தந்த அறநெறிகளை பாதுகாத்திடும் வண்ணம் தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின், திருஅருட்பிரகாச வள்ளலார் பிறந்த அக்டோபர் 5 ஆம் நாள் இனி ஆண்டுதோறும் “தனிப்பெருங்கருணை நாள்” என கடைபிடிக்கப்படும் என அறிவித்தார். சென்னையில் வள்ளலார் வாழ்ந்த பகுதிக்கு வள்ளலார் நகர் என்று பெயர் சூட்டியதோடு, அந்த பகுதியிலுள்ள பேருந்து நிலையத்திற்கும் அவர் பெயரை சூட்டி பெருமை சேர்த்தவர் கலைஞர். அவரது வழியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்வள்ளலார் நகர் பேருந்து நிலையத்தை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் மூலம் ரூ. 6 கோடி செலவில் பயணிகளின் அனைத்து அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்கின்ற வகையில் உருவாக்குகின்ற பணியை தொடங்கி வைத்துள்ளார்.

இதற்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல் வருகின்ற நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் சென்னையில் மிகப்பெரிய அளவில் 10 ஆயிரம் சன்மார்க்க அன்பர்கள் குறிப்பாக 2000க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்கின்ற வள்ளலார் சர்வதேச மாநாட்டை நடத்துவதென்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. அம்மாநாட்டில் வள்ளலாரின் பெருமைக்கு புகழ் சேர்க்கின்ற 25 சன்மார்க்கிகளுக்கு பட்டயம் வழங்கி  சிறப்பு செய்திடவும், வள்ளலார் குறித்த நூலும் வெளியிடப்படவும் உள்ளது. இப்படி அனைத்து வகைகளிலும் வள்ளலாரின் அறநெறிகளை பாதுகாக்கும் அரசாக திராவிட மாடல்அரசு திகழ்கிறது. இத்தகைய பணிகளுக்கு உறுதுணையாக இருக்கின்ற மாவட்ட அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் துறையின் அலுவலர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அனைவருக்கும் துறையின் சார்பில் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

Advertisment

இந்நிகழ்ச்சியில் இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் பி.என். ஸ்ரீதர், மாவட்ட ஆட்சி தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் இராஜசேகரன், இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் ஜோதி, உதவி ஆணையர் ஆர். சந்திரன், நிர்வாக அலுவலர் ராஜா சரவணகுமார், அரசு அலுவலர்கள் மற்றும் சன்மார்க்க அன்பர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.