Valiyankulam residents who blocked the road hold talks with police Photograph: (police)
மதுரை வளையங்குளம் பகுதியில் சாலையை அகலப்படுத்த வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை- அருப்புக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் வலையங்குளம் பகுதியில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வருகின்றனர். அந்த பகுதியில் 38 கோடியே 28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நெடுஞ்சாலை பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. வலையங்குளம் பகுதியில் ஒரு பகுதியிலிருந்து மற்ற பகுதிக்கு கடந்து செல்வதற்கு சாலையின் குறுக்கே அண்டர் பாஸ் சாலை வசதி செய்யப்பட்டிருக்கிறது.
ஆனால் அந்த பாதை சிறிய அளவில் இருப்பதால் விபத்துகள் ஏற்படும் எனவே அந்த பாதையை அகலப்படுத்தி கொடுக்க வேண்டும் என அந்த பகுதியைச் சேர்ந்த ஐநூறுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று கூடி நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தால் வலையன்குளத்தில் இருந்து எலியார்பத்தி சுங்கச்சாவடி வரை சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து தடைபட்டு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
காலை நேரம் என்பதால் பணிக்கு செல்வோர் மற்றும் பள்ளிக்கு செல்வோர் இந்த போராட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.