நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கியவுடன் இளைய தலைமுறையினர் பலரும் அவரது கட்சியில் இணைந்தனர். அந்த வகையில் கோவை கவுண்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்த வைஷ்ணவி என்ற இளம்பெண் த.வெ.க கட்சியில் இணைத்து மக்கள் பணிகளை செய்து வந்தார். மேலும் தனது சொந்த பணத்தில் மக்களுக்கு சில நலத் திட்டங்களை செய்து வந்தார். அதன் காரணமாகவே கட்சியினர் மத்தியில் குறுகிய காலத்திலேயே பிரபலமடைந்தார்.
அண்மையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் உரிய முக்கியத்துவம் தரவில்லை என்று கூறி வைஷ்ணவி த.வெ.க.வில் இருந்து விலகி இருந்தார். இதனைத் தொடர்ந்து சகோதரி வைஷ்ணவிக்கு அரசியல் ஆசை இருந்தால் எங்கள் கட்சிக்கு வரலாம் என்று பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அழைப்பு விடுத்திருந்தார். அதேபோல் மதிமுகவில் இருந்தும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதனை தொடர்ந்து, கோவையில் தி.மு.க முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில் வைஷ்ணவி திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து அவர், த.வெ.க கட்சி குறித்தும், அக்கட்சியின் தலைவர் விஜய் குறித்து தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்.
இந்த நிலையில், த.வெ.க தலைவர் விஜய் மற்றும் தொண்டர்கள் மீது வைஷ்ணவி கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். தன்னைப் பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறாக மீம்ஸ்கள் மற்றும் வீடியோக்களை தவெக தொண்டர்கள் பதிவிட்டு வருவதாகவும், அவர்களை கண்டிக்காததாலும் விஜய் மீது அவர் புகார் அளித்துள்ளார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய வைஷ்ணவி, “நான் கடந்த மூன்று தவெக கட்சியில் இருந்து வெளியேறிய சமயத்தில் இருந்தே தொடர்ந்து தவெக தொண்டர்கள் ரொம்ப புண்புறுத்தும் வகையில் கமெண்ட்ஸ் தான் போட்டுட்டு இருக்காங்க. ஆபாசமாக சித்தரிப்பது, மார்பிங் செய்வது, தேவையில்லாத அவதூறுகளை பரப்புவது போன்ற செயல்கள் தான் தொடர்ந்து நடந்து வருகிறது. தவெக தலைவர் விஜய், இது குறித்து ஏதாவது வாய் மொழியாகவோ அல்லது எழுத்து வடிவிலயோ அறிக்கை கொடுப்பார் என்று எதிர்பார்த்தேன். ஆனால், கடந்த 2 மாத காலமாக எதுவும் நடக்கவில்லை. இதன் பின்னரும், அவர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை இல்லை. அதனால், தவெக தலைவர் விஜய் மற்றும் அவருடைய தொண்டர்கள் மீது புகார் அளித்துள்ளேன்” என்று கூறினார்.