காங்கிரஸ் கட்சியின் தரவு மேலாண்மை மற்றும் வல்லுநர் குழுவின் தலைவரான பிரவீன் சக்கரவர்த்தி, தவெக தலைவர் விஜய்யை கடந்த 5ஆம் தேதி நேரில் சந்தித்துப் பேசியதாகத் தகவல் வெளியானது. காங்கிரஸ் கட்சியின் மிக முக்கியமான ஒரு பொறுப்பில் இருப்பவரும், அக்கட்சியின் முக்கியத் தலைவரான ராகுல் காந்திக்கு மிக நெருக்கமாக இருக்கக்கூடிய நபர்களில் ஒருவருமான பிரவீன் சக்கரவர்த்தி, தவெக தலைவர் விஜய்யை சந்தித்துப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த சூழலில் அனைத்து மாநிலங்களையும் விட தமிழகம் தான் அதிக கடன் வாங்கியுள்ளதாகவும், உத்தரப் பிரதேசத்தை விட தமிழகத்தின் கடன் அதிகமாக உள்ளது என்றும் திமுக அரசை விமர்சித்து பிரவீன் சக்கரவர்த்தி பதிவை ஒன்றை வெளியிட்டார். இது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் அங்கும் வகித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், திமுக அரசின் பொருளாதார கொள்கையை காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி விமர்சித்திருப்பது தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியது.
இதனிடையே, திமுக அரசை விமர்சித்து கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் பிரவீன் சக்கரவர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு கடிதம் எழுதி வலியுறுத்தியதாகத் தகவல் வெளியானதாகக் கூறப்படுகிறது. இந்த செய்தி வெளியானதை அடுத்து, காங்கிரஸ் உட்கட்சி விவகாரங்களில் கூட்டணி கட்சிகள் தலையிட வேண்டாம் என விசிக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும், கூட்டணி கட்சிகளுடன் நடக்கும் விஷயங்களில் லக்ஷ்மண் ரேகையை மதிக்குமாறு தங்களது எம்.பிக்களுக்கு வழிகாட்ட வேண்டும் என கூட்டணி கட்சிகளிடம் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பதில் அளித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், மாணிக்கம் தாகூர் எச்சரிக்கை விடுத்தது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த வைகோ, “லட்சுமண ரேகையை தாண்டும் வழக்கம் எங்களுக்கு எப்போதும் கிடையாது. நாங்கள் எங்களுடைய எல்லையை தாண்டி போவது இல்லை. எந்த கருத்துக்களை சொல்லவோ, கூட்டணி தர்மம் தளைப்பதற்கும், கூட்டணி தலைமையை மதித்து செயல்படுவதற்கும் இலக்கணமாக செயல்படுகிற கட்சி மதிமுக. அதனால், கூட்டணியில் இருக்கக்கூடிய எந்த கட்சியையும் விமர்சிக்கிற வகையிலோ, புண்படுத்துகிற வகையிலோ நாங்கள் எந்த கருத்தையும் சொல்லமாட்டோம்” என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/01/manivaiko-2026-01-01-15-06-44.jpg)