Vaiko suddenly appeared at Seeman's press conference at Pasumpon
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118வது பிறந்த நாள் விழா இன்று (30-10-25) கொண்டாடப்படுகிறது. மேலும் அவரது 63வது குருபூஜை, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இன்று (30.10.2025) நடைபெற்று வருகிறது. இதனால் முத்துராமலிங்க தேவரின் உருவச்சிலைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உபல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர்.
இந்த நிகழ்வையொட்டி, காலை முதலே ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் தனித் தனியாக நேரம் ஒதுக்கப்பட்டு முறையாக அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, முதல்வர் மு.க.ஸ்டாலின் காலையிலேயே ராமநாதபுரம் பசும்பொன்னுக்கு வந்து முத்துராமலிங்க தேவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் முத்துராமலிங்க தேவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பசும்பொன்னுக்கு வந்து முத்துராமலிங்க தேவரின் நினைவாலயத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து முத்துராமலிங்க தேவருடைய பெருமைகளை பேசினார். பேசி முடித்து அங்கிருந்து சென்ற போது, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர் சந்திப்பு நிகழ்வுக்கு வந்தார். இதையறிந்த சீமான், உடனடியாக வைகோவிடம் சென்று அவரை கட்டிபிடித்து செய்தியாளர் சந்திப்பு நிகழ்வுக்கு அழைத்து வந்தார். அதனை தொடர்ந்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
இதில் பேசிய வைகோ, “முத்துராமலிங்க தேவருக்கு மலர்வளையம் தூவி வீரவணக்கம் செய்கின்ற நேரத்தில், தமிழ்நாட்டுடைய தன்மானத்துக்கும் வீரத்துக்கும் இளைஞர்களின் உள்ளங்களில் புயல் வீசி வருகிற என் அருமை சகோதரர் சீமானும், நானும் ஒரே வேளையில் இங்கே வந்தது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியை தருகிறது. அவரது முயற்சிகள் வெற்றி மேல் வெற்றி பெறட்டும்” என்று கூறினார். அப்போது அவரிடம் சீமானுடன் பேட்டி கொடுத்திருக்கிறீர்களே என்று கேள்வி எழுப்பினர். அதற்கு சீமான் தோள் மீது கை போட்டுவிட்டு வைகோ, “நான் மருத்துவமனையில் இருந்த போது அவர் என்னை பார்த்தார். அவருக்கு உடம்பு சரியில்லை என்றால் நான் கவலையோடு அவரிடம் பேசுவேன்” என்று கூறினார். உடனே சீமான், “எங்க அண்ணனுடைய அம்மா இறந்தபோதே நான் அவரை பார்த்துவிட்டேன்” என்று கூற உடனே வைகோ, “கலிங்கப்பட்டி வீட்டில் எங்க அம்மா இறந்தபோது ராத்திரியோடு ராத்திரியாக சீமான் வந்துவிட்டார்” என்று கூறினார். அதை தொடர்ந்து அங்கிருந்து அவர்கள் இருவரும் ஒன்றாக சென்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png) 
   Follow Us
 Follow Us/nakkheeran/media/media_files/2025/10/30/seevaik-2025-10-30-20-28-43.jpg)