மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பேரறிஞர் அண்ணா 117வது பிறந்தநாள் மாநாடு திருச்சி மாவட்டம் சிறுகனூரில் இன்று (15.09.2025) மாலை 03:30 மணி அளவில் தொடங்கியது. இந்த மாநாட்டில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ எம்.பி உள்ளிட்ட மதிமுக நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். அணி திரள்வோம்! ஆர்ப்பரிப்போம்!! அங்கீகாரம் பெறுவோம்! என்ற முழக்கத்தின் அடிப்படையில் மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டின் வெளியே 65 அடி உயர கொடி கம்பத்தில் மதிமுக கொடி ஏற்றப்பட்டது. இந்த மாநாட்டில் மொத்தம் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோ பேசுகையில், “ஸ்டெர்லைட் ஆலை தச்சாலை கோவாவில் விரட்டப்பட்டு குஜராத்தில் அனுமதி மறுக்கப்பட்டு மராட்டியத்திலே இடம்பெற்று அங்கிருக்கின்ற அல்போன்சா மாம்பழத்தை உற்பத்தி செய்கின்ற விவசாயிகள் சம்மட்டிகளோடும் கடப்பாறையோடும் சென்று 400 கோடி ரூபாய் செலவிலே அமைக்கப்பட்ட ஸ்டெர்லைட் நச்சாலையை அதனுடைய கட்டிடங்களை எந்திரங்களை உடைத்து தூள் தூளாக்கி நொறுக்கினார்கள். மராட்டியத்தின் அன்றைய முதல்வர் சரத் பவார் காவல் துறையை அங்கு அனுப்பாமல் மறுநாளே கொடுத்த லைசன்ஸை வாபஸ் பெற்றுக் கொண்டார்.
இதனால் தமிழ்நாட்டில், அன்றையஅதிமுகவினுடைய முதலமைச்சரிடம் அனுமதி பெற்று தூத்துக்குடியிலே அலை கடலோரத்திலே நச்சாலையை அமைத்தனர். இதனை எதிர்த்து குரூஸ் பெர்னாந்து சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு எத்தனை உண்ணாவிரத போராட்டங்கள் எத்தனை மறியல் போராட்டங்கள் எத்தனை நடைபயணங்கள் . அனைத்துக்கும் மேலாக உயர்நீதிமன்றத்திலே 7 மணி நேரம் கே.கே. வேணுகோபால் என்ற பிரசித்தி பெற்ற வழக்கறிஞர் ஆலையின் சார்பாக 4 மணி நேரம் வாதாடினார். நான் நெடுநேரம் வாதங்களை எழுப்பிய போது நான் சுயநலத்துக்காக இந்த ஆலையை எதிர்க்கவில்லை என் நேர்மைக்காக என் நாணயத்துக்காக நான் அதை போராடுகிறேன் என்றவுடன் சென்னை உயர்நீதிமன்றத்தினுடைய தலைமை நீதிபதி லிபரான் உடனே குறிக்கிட்டு உங்கள் நேர்மையை நாணயத்தை நாங்கள் நன்றாக அறிவோம். எவரும் உங்களுக்கு நற்சாட்சி பத்திரம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை . எந்த ஏட்டிலும் இது குறித்து ஒரு வரி கூட வரவில்லை.
ஒருவேளை உங்கள் நாணயம் சந்தேகத்துக்குரியது என்றவர் ஒரு ஐயத்தை எழுப்பி இருந்தால் நான்கு கால செய்தியாக ஆறுகால செய்தியாக அது இடம்பெற்றிருக்க கூடும். போராடி போராடி தீர்ப்பாயத்திலும் உச்சநீதிமன்றத்திலும் சென்று வாதாடி நாரிமன் என்ற உச்சநீதிமன்ற நீதிபதி முன்னிலையில் எனக்கு கொடுக்கப்பட்ட நிமிடங்களிலே என் வாதங்களை தொடுப்பது மிகவும் கடினம். ஆகையால் நான் கொஞ்சம் மன தளர்ச்சியோடு உங்கள் முன்னால் நிற்கிறேன் என்றேன். அதற்கு நீதியரசர் நாரிமன் சொன்னார் நீங்களா நெர்வஸாக இருக்கிறீர்கள். எங்களை நெர்வஸாக ஆக்கிவிட்டு நீங்கள் அங்கே நின்று கொண்டிருக்கிறீர்கள் என்றார். அப்படி போராடி ஸ்டெர்லைட் ஆலையை விரட்டி அடித்த இயக்கம் மதிமுக” எனப் பேசினார்.