தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் வழக்கமாக மேற்கொள்ளும் நடைப்பயிற்சியில் கடந்த 21ஆம் தேதி (21.07.2025) ஈடுபட்டிருந்தார். அப்போது அவருக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டது. இதனையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன்படி முதல்வர் மு.க. ஸ்டாலின் மருத்துவமனையில் 7வது நாளாகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை (27.07.2025) வரை சிகிச்சை பெற்று வந்தார். அதன் பின்னர் அன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வீடு திரும்பினார்.
இத்தகைய சூழலில் தான் 10 நாட்களுக்குப் பிறகு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று (31.07.2025) காலை தலைமைச் செயலகம் வருகை தந்து பல்வேறு துறைகளின் முடிவுற்ற திட்டப்பணிகளைத் தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு காணொளி காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார். முன்னதாக முதல்வர் மு.க. ஸ்டாலினை, தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் நேற்று காலை சந்தித்துப் பேசினார். அடையாறு பூங்காவில் காலை நடைப்பயிற்சி சென்றபோது இருவரும் சந்தித்துப் பேசிக் கொண்டார். அப்போது முதல்வர் மு.க. ஸ்டாலினிடம், ஓ. பன்னீர்செல்வம் நலம் விசாரித்ததாகக் கூறப்பட்டது.
மற்றொருபுறம் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் அவரது ஆதரவாளர்களோடு நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு தனது உறவை முறித்துக் கொண்டது என முடிவெடுக்கப்பட்டது. இதற்கிடையே ஆழ்வார்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று சந்தித்துப் பேசியிருந்தார். இந்த சந்திப்பின் போது பிரேமலதா, முதல்வர் மு.க. ஸ்டாலினின் உடல்நலம் குறித்து விசாரித்ததாகத் தகவல் வெளியாகியிருந்தது. அப்போது தேமுதிக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் எல்.கே. சுதீஸ், முத்த நிர்வாகிகளான பார்த்தசாரதி, ஆனந்த் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
அதன் பின்னர் ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் மு.க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் நேற்று மாலை சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார். இதன் தொடர்ச்சியாக 2வது நாளாக இன்றும் (01.08.2025) நடைப்பயிற்சியின் போது முதல்வர் மு.க. ஸ்டாலினை ஓ. பன்னீர்செல்வம் மீண்டும் சந்தித்துப் பேசியிருந்தார். இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரை. வைகோ எம்.பி. என அவரது கட்சி நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். முதல்வர் மு.க. ஸ்டாலினின் உடல்நலம் பற்றி விசாரிப்பதற்காக, வைகோ மாநிலங்களவையில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் முதல் முறையாகச் சந்தித்துப் பேச உள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்வைத்து அரசியல் கட்சியினர் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் அரசியல் வட்டாரத்தில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்த பார்க்கப்படுகிறது.