மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பேரறிஞர் அண்ணா 117வது பிறந்தநாள் மாநாடு திருச்சி மாவட்டம் சிறுகனூரில் இன்று (15.09.2025) நடைபெற்றது. இந்த மாநாட்டில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ எம்.பி உள்ளிட்ட மதிமுக நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். அணி திரள்வோம்! ஆர்ப்பரிப்போம்!! அங்கீகாரம் பெறுவோம்! என்ற முழக்கத்தின் அடிப்படையில் மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டின் வெளியே 65 அடி உயர கொடி கம்பத்தில் மதிமுக கொடி ஏற்றப்பட்டது. இந்த மாநாட்டில் மொத்தம் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோ பேசுகையில், “மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சொல்லுகிறார் உலகத்தின் முதல் மொழி சமஸ்கிருதம். மூத்த மொழி தாய் தாய்மொழி சமஸ்கிருதம் என்று . சமஸ்கிருதமும் இந்தியும் மட்டும்தான் இந்தியாவிலே ஆட்சி மொழிகளாக இருக்க முடியும் என்று கூறினார். அமித்ஷாவே நீங்கள் சொல்லுகிற சமஸ்கிருதம் செத்துப்போன மொழி. 140 கோடி மக்கள் வாழ்கிற இந்த நாட்டில் 24 ஆயிரத்து 387 பேருக்கு மட்டும்தான் சமஸ்கிருதம் தெரியும் . இதை எதிர்த்து களமாடுவதற்கு 1968 மார்ச் திங்கள் ஆறாம் நாள் ஆட்சிக்கு வந்த ஒரு வருட காலம் சரியாக கழிந்த பின்னர் சட்டமன்றத்திலே பேரறிஞர் அண்ணா கொண்டு வந்த தீர்மானம் தான் இருமொழி கொள்கை.
இங்கே இந்தி வேண்டாம். தமிழும் ஆங்கிலமும் தான் என்றவர் முழங்கிய முழக்கம் இன்று கல்கத்தாவிலே மேற்கு வங்கத்திலே ஒலிக்கிறது. மராட்டியத்திலே ஒலிக்கிறது. ராஜ் தாக்கரையும் உத்தவ் தாக்கரையும் இந்திக்கு முழுக்கு போட்டுவிட்டு இங்கே ஆங்கிலமும் மராட்டியமும் தான் என்று பிரகடனம் செய்து விட்டார்கள். அருகாமையில் இருக்கக்கூடிய கர்நாடகம் அதை பின்பற்றுகிறது. சமூக நீதிக்கு எப்படி தமிழ்நாடு இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கெல்லாம் முன்மாதிரியாக வழிகாட்டியதோ அதேபோலத்தான் இந்த பிரச்சனையிலும் மொழி பிரச்சனையிலும் தமிழ்நாடு தான் வழிகாட்டுகிறது. நீட் தேர்வு, பொது கல்வி மசோதா, பொது நதிநீர் மசோதா என்று மசோதாக்களை கொண்டு வந்து இந்தியாவின் பன்முகத் தன்மையை சுக்குநூறாக உடைத்து ஒரே மொழி ஒரே மதம் ஒரே கலாச்சாரம் ஒரே பண்பாடு ஒரே நாடு என்பதை என்பதை தாரக மந்திரமாக கொண்டு 2022 பிப்ரவரி திங்களில் பிரயாக் நகர் என்று அழைக்கப்படுகிற அலகாபாத் நகரில் தர்ம சன்சத் என்ற மாநாட்டை ஆர்.எஸ்.எஸ். கூட்டமும் இந்துத்துவா சக்திகளும் சேர்ந்து நடத்தி 32 பக்கத்துக்கு ஒரு பிரகடனம் செய்திருக்கிறார்கள்.
இதை நாடாளுமன்றத்திலேயே நான் சொன்னேன். அதில் இடம்பெற்றுள்ள முதலாவது அறிவிப்பு என்ன தெரியுமா?. இனி இந்த நாடு இந்தியா என்ற பெயர் கிடையாது. பாரத் என்று தான் அழைக்க வேண்டும். இனி இந்த நாட்டுக்கு டெல்லி தலைநகரம் ஆகாது. வாரணாசி தான் தலைநகரம் ஆக வேண்டும். இனி இந்த நாட்டிலே முஸ்லிம்களுக்கு ஓட்டுரிமை கிடையாது. இனி இந்த நாட்டிலே கிறிஸ்தவர்களுக்கு ஓட்டுரிமை கிடையாது. இனி இந்த நாட்டில் சமஸ்கிருதமும், இந்தியும் மட்டும் தான் ஆட்சி மொழிகளாக இருக்கும். குருகுல கல்விதான் இனி கொண்டு வரப்படும். பாராளுமன்றம் தர்மசபை என்று அழைக்கப்படும். இதை பாரதிய ஜனதா கட்சியினுடைய எந்த தலைவராவது கண்டித்தது உண்டா?. பிரதமர் கண்டித்தது உண்டா?. உள்துறை அமைச்சர் மூச்சுவிட்டது உண்டா?. ஆகவே இப்படிப்பட்ட கொடுமைகள் தாண்டவமாடிக் கொண்டிருக்கிற நேரத்தில் நான் எச்சரிக்கிறேன். கடந்த 10 - 15 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு மாநாட்டிலே தீர்மானம் போட்டோம். இனி இந்த நாட்டை யுனைட்டட் ஸ்டேட்ஸ் ஆப் இந்தியா ( இந்திய ஐக்கிய நாடுகள்) என்று தான் அழைக்க வேண்டும் எனச் சொன்னேன்” எனப் பேசினார்.