தமிழக அரசியலில் ‘பாராளுமன்றப் புலி’ என்று அழைக்கப்படும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு நடைபயணங்கள் ஒரு சாதாரண போராட்ட வடிவம் அல்ல. அது அவரது அரசியல் வாழ்வின் இதயத் துடிப்பு. ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் நடந்து, லட்சக்கணக்கான மக்களைச் சந்தித்து, சமூகநீதி, தமிழர் உரிமை, சுற்றுச்சூழல், போதை ஒழிப்பு எனப் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வரும் வைகோவின் நடைபயணங்கள் தமிழக அரசியலில் ஒரு தனித்துவமான அத்தியாயம்.

Advertisment

திராவிட இயக்கத்தின் போர்வாள் என்று அழைக்கப்படும் வைகோ, தனது அரசியல் பயணத்தில் 6000 கிலோமீட்டர் வரை நடைபயணம் மேற்கொண்டுள்ளார். தமிழக அரசியலில் நடைபயணங்கள் என்றாலே வைகோவின் பெயர் தானாக நினைவுக்கு வரும். இதுவரை 11 நடைபயணங்கள் நடத்தியுள்ள வைகோவின் முக்கியமானவை சிலவற்றைப் பார்ப்போம். 1986-ல் தொடங்கியது அவரது நடைபயண வரலாறு. தென்திருப்பேரை முதல் திருநெல்வேலி வரை நடத்திய முதல் பயணம், மகரநெடுங்குழைநாதர் கோயிலில் திருடப்பட்ட நகைகளை மீட்கக் கோரியது. அப்போது திமுகவில் இருந்த வைகோ, கலைஞருடன் இணைந்து போராட்டங்களில் தீவிரமாக இறங்கியிருந்தார்.

Advertisment

1994-ல் மதிமுகவைத் தொடங்கிய உடனேயே கன்னியாகுமரி முதல் சென்னை வரை மாபெரும் நடைப்பயணம் மேற்கொண்டார். தமிழகத்தின் தென்முனையில் இருந்து தலைநகர் வரை நடந்து, புதிதாகத் தொடங்கிய தனது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை மக்களிடம் கொண்டு சேர்த்து உயிரூட்டியது இந்தப் பயணம்தான். 1996-ல் காவிரி நீர் பிரச்சினைக்காக பூம்புகார் முதல் கல்லணை வரை நடைபயணம் நடத்தினார். தமிழக விவசாயிகளின் குரலை டெல்லி வரை கொண்டு சென்ற இந்தப் போராட்டம் பெரும் கவனத்தைப் பெற்றது. 2004-ல் தென்னிந்திய நதிநீர் இணைப்புக்காக நெல்லை முதல் சென்னை வரை 42 நாட்களில் 1200 கிலோமீட்டர் தூரம் நடைபயணம் செய்தார். 2006ல் முல்லைப் பெரியார் அணையைப் பாதுகாக்க வலியுறுத்தி மதுரை முதல் தேனி, கம்பம் வரை ஆறு நாட்களில் 150 கிலோமீட்டர் தூரம் நடந்தார்.

அதன்பிறகு அரசியலில் தொடர் தோல்விகள், உடல்நலக் குறைவு உள்ளிட்ட காரணங்களால் பின்னடைவைச் சந்தித்த வைகோ, ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு 2012-ல் மீண்டும் தனது நடைபயண என்ற அஸ்திரத்தை கையில் எடுத்தார். முழு மதுவிலக்கை வலியுறுத்தி நெல்லை மாவட்டம் உவரியில் இருந்து மதுரை வரை 14 நாட்களில் 450 கிலோமீட்டர் தூரம் நடந்தார். 2013-ல் மீண்டும் மதுவிலக்கை வலியுறுத்தி கோவளம் முதல் மறைமலை நகர் வரை 11 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டார். அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவரைச் சந்தித்துப் பேசியது அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்பட்டது.  

Advertisment

2018-ல் மதுரை முதல் கம்பம் வரை நடைபயணம் மேற்கொண்டு நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்தார். சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் போராட்டமாக இது அமைந்தது. சமூக சீர்திருத்தங்கள், சமத்துவம், சமுதாய வளர்ச்சி எனப் பல்வேறு கோரிக்கைகளை நடைபயணங்கள் மூலம் மக்களிடம் கொண்டு சென்றவர் வைகோ. இப்போது 82 வயதிலும் தனது போராட்ட ஆயுதத்தை கைவிடாமல் மீண்டும் நடைபயணத்தைத் தொடங்கியுள்ள வைகோ, கட்சியினர் மத்தியில் புதிய உத்வேகத்தை பாய்ச்சியிருக்கிறார்.