சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தோழர் நல்லகண்ணு (101) வயது மூப்பு காரணமாகவும், மூச்சுத் திணறல் காரணமாகவும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று (25-02-26) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

Advertisment

அவரது உடல் சென்னை தியாகராயர் நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஏழை, எளிய அனைத்து தரப்பு மக்களுக்காக தன் வாழ்நாளையே அர்ப்பணித்த தோழர் நல்லகண்ணுவின் மறைவுக்கு தமிழக அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

அந்த வகையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தோழர் நல்லகண்ணுவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “அனைத்து தரப்பினரையும் அனைத்து கட்சியினரையும் மனிதாபிமானத்தோடு, மனிதநேயத்தோடு நேசிக்கும் பண்பு பெற்றிருந்த தோழர் நல்லகண்ணு, 1925 டிசம்பர் 26ல் திருவைகுண்டம் பெரும்பத்தூர் என்ற இடத்தில் பிறந்தார். மாணவனாக மாணவர்களை திரட்டி வெள்ளையனே வெளியேறு ஆகஸ்ட் புரட்சியில் பங்கேற்று 18 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு கிளைச் செயலாளர் முதல் தமிழ்நாடு மாநிலச் செயலாளர், அகில இந்திய அளவில் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய முக்கியமான நிர்வாகி என்ற பதவிகளை வகித்த அந்த மாமனிதர் ஏழு வருடம் சிறைச்சாலையை கொடுமையை அனுபவித்தார். இரண்டு வருடம் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார்.

ஒரு கட்டத்தில் அவர் இருக்கும் இடம் கண்டுபிடித்துவிட்ட காவல்துறை அவரை கொண்டு போய் ஒரு சின்ன குன்றினுடைய உச்சியில் கொண்டு போய் நிறுத்தி கொடுமையான சித்திரவதைகளை செய்தார்கள். அந்த தெற்கு சீமைக்கே உரிய அடர்ந்த முறுக்கி விடப்பட்ட மீசையோடு காட்சி அளித்த அவருடைய அந்த மீசையின் ஒவ்வொரு ரோமத்தையும் பிடுங்கினார்கள். அவ்வளவு கொடுமைகளையும் அவர் அனுபவித்த போதும் அவர் சமரசம் செய்து கொள்ளவில்லை. தூக்கிய செங்கொடியை தாழாமல் பிடித்துக் கொண்டு உழைக்கும் வர்க்கத்துக்காக, ஒடுக்கப்பட்ட தலித் மக்களுக்காக சாதி மத வேறுபாடுகளை சாதிமத வேறுபாடுகளை கலைய வேண்டும் என்பதற்காக, தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்களை பாதுகாப்பதற்காக, இலங்கை தீவில் ஈழ தமிழர்களுக்கு ஒரு விடியல் பிறக்க வேண்டும் என்பதற்காக, நெஞ்சார தமிழ விடுதலை புலிகள் மீதும் பற்றுக் கொண்டிருந்தவராக நான் அருகிலிருந்து அதை அறிந்தவன்

Advertisment

எல்லா அரசியல்வாதிகளுக்கும் இவரை போல் இருக்க வேண்டும் என்று ஒரு இலக்கணமாக, உதாரணமாக, முன்மாதிரியாக வாழ்ந்த அந்த மாமனிதர் தகைசால் தமிழர் என்ற விருதுக்கு பெருமை சேர்த்தவர். அவர் இதற்கு முன்பு மருத்துவமனையில் அனுபவிக்கப்பட்ட போது ஒவ்வொரு முறையும் நான் அருகில் சென்றிருக்கிறேன். கடந்த தடவை நான் போனபோது அவருக்கு நினைவு இருந்தது, பேசத்தான் முடியவில்லை. ஐந்து நிமிடம் அவர் இதயத்தில் பதியும் விதத்தில் நான் பேசிவிட்டுதான் வந்தேன். அவர் இன்றைக்கு இந்த மண்ணிலிருந்து மறைந்தாலும், எப்படி செங்கொடி என்கின்ற ஒரு லட்சிய பதாகை என்றும் இந்த உலகத்திலே பறந்து உள்ளது என்று சொல்கிறோமோ அதைப்போல தமிழ்நாட்டின் பொதுவாழ்வில், அரசியல் உலகில் அழியாத புகழோடு, குன்றாத கீர்த்தியோடு அந்த தகைசால் தமிழர், மாமனிதர் அண்ணன் நல்லக்கண்ணு அவர்கள் மறைவுக்கு, அவர் குடும்பத்தினருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய நிர்வாகிகள், தோழர்களுக்கும், அவரது உற்றார், உறவினர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கிறேன்.

தூத்துக்குடி, திருநெல்வேலி வட்டாரத்தில் நடக்கக்கூடாத கலவரம் வந்தபோது வீட்டிலேயே படுத்திருந்த அவருக்கு பெண் கொடுத்த மாமனாரை வெட்டி கொலை செய்யப்பட்டார். அப்பொழுதும் கூட அங்கே மாமனாருடைய சடலத்தை போய் பார்க்க போகாமல், திருநெல்வேலியில் ஒரு மூலையில் அறிவித்திருந்த போராட்டத்தில் போய் கலந்து கொண்டார் அண்ணன் நல்லக்கண்ணு. ஆகவே அவருடைய உற்றார், உறவினர்களுக்கு, கட்சி தோழர்களுக்கு மதிமுக சார்பில் எங்கள் வீர வணக்கத்தை கண்ணீர் அஞ்சலியை தெரிவித்து கொள்கிறேன்” என்று நினைவுகளோடு கூறினார்.