மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, போதைப்பொருள் ஒழிப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஜனவரி 2-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை திருச்சியில் இருந்து மதுரை வரை நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக மண்டல வாரியாக வைகோ நேரில் சென்று தொண்டர்களைத் தேர்வு செய்து வருகிறார்.

Advertisment

அந்த வகையில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்கள் அடங்கிய விழுப்புரம் மண்டலத்திற்கு உட்பட்ட மதிமுக இளைஞரணி, மாணவரணி மற்றும் தொண்டரணியிலிருந்து நடைபயணத்தில் பங்கேற்கும் தொண்டர்களைத் தேர்வு செய்யும் நிகழ்ச்சி சிதம்பரம் அருகே ஆனைமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து நேர்காணல் நடத்தினார்.

Advertisment

பின்னர் வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழ்நாட்டின் வாழ்வாதாரத்தைக் காக்க பல்வேறு நடைபயணங்களை நான் மேற்கொண்டிருக்கிறேன். அப்போதெல்லாம் மக்கள் எனக்கு மிகுந்த ஆதரவு அளித்தார்கள். இப்போது பெண்கள் மத்தியில் பய உணர்வும் கவலையும் ஏற்பட்டிருக்கிறது. இதற்குக் காரணம் போதைப்பொருள். பல இடங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகிலேயே போதைப்பொருள் விற்பனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் விளைவுதான் கோவையில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை. சமூகத்தைப் புரிந்து கொண்டு 60 ஆண்டுகளாக அரசியல் நடத்துகிறேன். போதைப்பொருளை ஒழித்துக்கட்டுவதற்காக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே இந்தச் சமத்துவ நடைபயணத்தை ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறேன்.

இந்த நடைபயணத்தைத் தொடங்கி வைப்பது முதலமைச்சர் ஸ்டாலின்தான். அந்த நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட பலர் பங்கேற்கிறார்கள். அடுத்தடுத்த கட்டங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஆர். முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் டி. வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட பலரும் இடையிடையே கலந்து கொள்கிறார்கள். மதுரையில் நடைபெறும் நிறைவுக் கூட்டத்தில் கவிப்பேரரசு வைரமுத்து, நடிகர் சத்யராஜ், திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.

Advertisment

மத்திய அரசு படு மோசமாக தமிழகத்தை வஞ்சிக்கிறது. மதுரை, கோவையை விட மக்கள் தொகை குறைவாக உள்ள நகரங்களில் மெட்ரோ ரயில் கொண்டு வரப்பட்டுள்ளது. கான்பூர், ஆக்ராவில் ரத்து செய்யவில்லை. ஆனால் தமிழக அரசு அளித்த திட்ட அறிக்கையைத் திருப்பி அனுப்பியிருக்கிறார்கள். ஒன்றிய அரசு ஓரவஞ்சனையாகச் செயல்படுகிறது. தமிழகத்தில் தங்கள் காலூன்ற முடியவில்லை என்பதற்காக எந்தெந்த விதத்தில் வஞ்சிக்க முடியுமோ அந்தந்த விதத்தில் வஞ்சிக்கிறது. இருக்கிற வாக்காளர்களைப் பட்டியலில் நீக்கவும், வெளியில் இருந்து வாக்காளர்களை இணைக்கவும் படு மோசமான மோசடியை நடத்திக் கொண்டிருக்கிறது” என்றார்.