Vaiko and mallai sathya
மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோவுக்கும், அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுக்கும் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து கடந்த ஜூலை மாதம் 10ஆம் தேதி வைகோ மற்றும் துரை வைகோ தலைமையில் மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அப்போது மல்லை சத்யா குறித்துப் பேசிய வைகோ, “பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்தது போல் எனக்கு மல்லை சத்யா துரோகம் செய்துவிட்டார்” என்று தெரிவித்திருந்தார்.
இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து தன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு மல்லை சத்யாவும் ஊடகங்களின் வாயிலாகப் பதிலளித்திருந்தார். மேலும் வைகோ மற்றும் துரை வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விவகாரம் தொடர்பாகவும், கடந்த 32 ஆண்டுக் கால பொது வாழ்க்கை தொடர்பாகவும் நீதி கேட்டு மல்லை சத்யா ஆகஸ்ட் 2ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தியிருந்தார்.
இந்த நிலையில், மதிமுகவில் இருந்து மல்லை சத்யாவை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ‘கட்சி விதிகளுக்கு எதிராக செயல்பட்டதால் மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யாவை, கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒழுங்கு நடவடிக்கையை கைவிடக்கோரி 15 நாட்களுக்குள் மல்லை சத்யா எழுத்துப்பூர்வமான விளக்கம் அளிக்கலாம்’ எனத் தெரிவித்துள்ளார்.