உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரைச் சேர்ந்த ஒரு இளம் கர்ப்பிணிப் பெண்ணுக்கு செவ்வாய்க்கிழமை இரவு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனால், அவரது குடும்ப உறுப்பினர்கள் அவரை உடனடியாக ஹரித்வாரில் உள்ள மாவட்ட மகளிர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது பணியில் இருந்த ஒப்பந்த மருத்துவர் சோனாலி, “இங்கு பிரசவம் செய்ய முடியாது; வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள்,” என்று அலட்சியமாக கூறி கர்ப்பிணிப் பெண்ணை அனுமதிக்க மறுத்துள்ளார். ஆனால், வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு பண வசதி இல்லாததால், வேறு வழியின்றி கர்ப்பிணி பெண் அந்த மருத்துவமனையிலேயே தங்கியிருந்தனர்.

Advertisment

இருப்பினும், கர்ப்பிணிப் பெண்ணுக்கு மருத்துவமனையில் படுக்கை ஒதுக்கவோ, மருத்துவ உதவி வழங்கவோ மருத்துவர் சோனாலியோ அல்லது செவிலியர்களோ முன்வரவில்லை. இதனால், அவர் வேறு வழியின்றி மருத்துவமனை வராண்டாவிலேயே படுத்திருந்துள்ளார். அவருடன் அவரது குடும்ப உறுப்பினரான ஒரு முதிய பெண்மணியும் துணைக்கு இருந்திருக்கிறார். நள்ளிரவு 12 மணிக்கு மேல் திடீரென பிரசவ வலி அதிகமாக, அவர் தரையில் கிடந்து துடித்தார். அப்போதும் மருத்துவமனை தரப்பில் இருந்து யாரும் உதவிக்கு வரவில்லை. இதனால், தாங்க முடியாத வலியில் அதிகாலை 1:30 மணிக்கு அந்த கர்ப்பிணிப் பெண் மருத்துவமனை வராண்டாவிலேயே குழந்தையைப் பெற்றெடுத்தார். அதன் பிறகு, நடந்தவற்றைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு செவிலியர், “இப்போ சுகமாக இருக்கிறதா? இன்னும் நிறைய குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டுமா?” என்று கேலி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Advertisment

இதை அங்கிருந்த ஒருவர் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இந்த வீடியோ மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பலரும் செவிலியர் மற்றும் மருத்துவருக்கு எதிராக கடும் கண்டனங்களைப் பதிவு செய்தனர். மேலும், இந்த விவகாரத்தை கையில் எடுத்த எதிர்க்கட்சிகள், மாநிலத்தின் மருத்துவக் கட்டமைப்பு குறித்து கேள்வி எழுப்பினர். இதனால், மாநில சுகாதாரத் துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. அதன்படி, மருத்துவர் சோனாலி உடனடியாக பணி நீக்கம் செய்ய உத்தரவிட்டார். அத்துடன், பணியில் இருந்த இரு செவிலியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதேசமயம், “சம்பவம் குறித்து விசாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணையின் அடிப்படையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று முதன்மை மருத்துவ அதிகாரி ஆர்.கே. சிங் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் வெறும் மருத்துவ அலட்சியத்தின் உதாரணம் மட்டுமல்ல, உணர்வற்ற தன்மையையும், பொது அமைப்பு முறையில் உள்ள தோல்வியையும் பிரதிபலிக்கிறது. சில ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தாலும், பரந்த அளவிலான சீர்திருத்தங்கள் தேவை. முறையான பயிற்சி மற்றும் கடுமையான கண்காணிப்பு ஆகியவற்றை முறைப்படுத்த வேண்டும்.

Advertisment

வசதி படைத்தவர்கள் நோய்வாய்ப்பட்டால், உடனே தனியார் மருத்துவமனைக்குச் சென்று உயர்தர சிகிச்சை பெற்றுக்கொள்வார்கள். ஆனால், ஏழை எளிய மக்களிடம் அவ்வளவு பணம் இல்லாததால், அவர்களின் ஒரே நம்பிக்கையாகவும், கடைசி நம்பிக்கையாகவும் அரசு மருத்துவமனைகள் மட்டுமே உள்ளன. அப்படி இருக்கும்போது, அரசு மருத்துவமனைகளில் இதுபோன்ற அலட்சியப் போக்கு நிலவுவது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்துகிறது. அதனால், அரசு உடனடியாக இதில் தலையிட்டு, இனி இதுபோன்ற தவறுகள் நடக்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.