உத்தரகண்ட் மாநிலத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ரேகா ஆர்யா. இவரது கணவர் கிர்தாரி லால் சாஹு. இவர், பீகாரில் திருமணத்திற்குப் பெண்கள் ரூ. 20,000 முதல் ரூ. 25,000 வரையிலான விலையில் கிடைக்கிறார்கள் என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் அல்மோராவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசியதாகக் கூறப்படும் இந்த பேச்சுக்கு, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் பீகார் மாநில மகளிர் ஆணையம் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது. இது சம்பந்தமான காணொளியில் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது. அதில் சாஹு பார்வையாளர்களை நோக்கி, “நீங்கள் முதுமையில் திருமணம் செய்துகொள்வீர்களா?.
உங்களால் திருமணம் செய்துகொள்ள முடியாவிட்டால், எங்களுடன் வாருங்கள், நாங்கள் உங்களுக்குத் திருமணம் செய்து வைக்கிறோம். நாங்கள் உங்களுக்காகப் பீகாரில் இருந்து பெண்களைக் கொண்டு வருவோம். அங்கே ரூ. 20,000 முதல் 25,000 வரை கொடுத்தால் பெண்கள் கிடைப்பார்கள்” என்று பேசியுள்ளார். இந்த கருத்துக்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கருத்துக்குக் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ள காங்கிரஸ் மாநிலத் தலைவர் கணேஷ் கோடியால், "அமைச்சர் ஆர்யாவின் கணவரின் இந்த பேச்சு, பீகார், கேரளா அல்லது உத்தரகண்ட் என எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், இந்தியப் பெண்களுக்குச் செய்யப்பட்ட அவமானம்”என்று கூறினார்.
மேலும் பாஜக கட்சியிலிருந்தும் கண்டனங்கள் வலுத்துள்ளன. பாஜக மாநில ஊடகப் பொறுப்பாளர் மன்வீர் சிங் சவுகான், “இது பெண்களின் கண்ணியத்தின் மீதான தாக்குதல். இந்த வகையான சிந்தனை தான் கடத்தல், குழந்தைத் திருமணம் மற்றும் பெண்களைச் சுரண்டுதல் போன்ற சமூகத் தீமைகளை ஊக்குவிக்கிறது” என்று அவர் கூறினார். பெண்களுக்கு எதிரான இத்தகைய 'வெறுப்பு நிறைந்த சிந்தனைகளையும் அறிக்கைகளையும்' தனது கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது என்று தெரிவித்துள்ளார். இந்த கண்டனங்களைத் தொடர்ந்து, "தான் ஒரு நண்பரின் திருமணம் குறித்து மட்டுமே பேசிக்கொண்டிருந்தேன். நான் பேசியவற்றைத் திரித்துக் கூறிவிட்டார்கள். இருப்பினும் என் வார்த்தைகள் யாரையாவது புண்படுத்தியிருந்தால் அல்லது காயப்படுத்தியிருந்தால், நான் கைகூப்பி மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்று சாஹு கூறியுள்ளார்.
இருப்பினும், சாஹு வின் இந்தக் கருத்துகளுக்காக அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்று பீகார் மாநில மகளிர் ஆணையம் (BSWC) தெரிவித்துள்ளது. BSWC தலைவர் அப்சரா செய்தியாளர்களிடம் கூறுகையில், "அவரது கருத்துகள் மிகவும் கண்டிக்கத்தக்கவை. இது அவரது மனநலம் குன்றியுள்ளதைக் காட்டுகிறது. அவரது மனைவி ஏற்கனவே உத்தரகண்ட் அரசாங்கத்தில் அமைச்சராக இருக்கும்போது, ​​அவர் எப்படி பெண்களைப் பற்றி இப்படி ஒரு அறிக்கையை வெளியிட முடியும்?" என்று கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/03/uttarkand-minister-husband-2026-01-03-21-55-25.jpg)