Uttar pradesh Minister narrowly escapes car accident on highway
ஆக்ரா - லக்னோ நெடுஞ்சாலையில் ஏற்பட்ட கார் விபத்தில் உத்தரப் பிரதேச மகளிர் நலன் மற்றும் குழந்தை மேம்பாட்டுத்துறை அமைச்சர் நூலிழையில் தப்பித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. யோகி ஆதித்யநாத்தின் அமைச்சரவையில் மகளிர் நலன் மற்றும் குழந்தை மேம்பாட்டுத்துறை அமைச்சராக பேபி ராணி மெளரியா என்பவர் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் நேற்று ஹத்ராஸ் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதனை முடித்துவிட்டு, அமைச்சர் பேபி ராணி தனது காரில் லக்னோவுக்குச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரது வாகனத்திற்கு முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு லாரியின் டயர் திடீரென வெடித்தது. இதனால் லாரி கட்டுப்பாட்டை இழந்து அமைச்சர் பேபி ராணியின் கார் மீது மோதியது. உடனடியாக அமைச்சரின் ஓட்டுநர் திறம்பட செயல்பட்டு வாகனத்தை நிறுத்தினார். இதனால், ஒரு பெரிய சாலை விபத்து தவிர்க்கப்பட்டது. வாகனம் கடுமையாக சேதமடைந்தாலும், அமைச்சர் பேபி ராணி எந்தவித காயமும் இன்றி நூலிழையில் உயிர் தப்பினார்.
இந்த சம்பவம் நடந்த உடனேயே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தை ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்தனர். மேலும், அமைச்சர் பேபி ராணி மெளரியா மற்றொரு வாகனத்தில் பத்திரமாக லக்னோவுக்கு அனுப்பப்பட்டார். இதற்கிடையில், நெடுஞ்சாலையில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் விபத்துக்களைத் தடுப்பதற்கும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் பேபி உத்தரவிட்டார்.
Follow Us