Advertisment

'அமெரிக்கவின் வர்த்தகப் போர்: இழப்பை தடுக்க ஊக்குவிப்பு திட்டங்கள் தேவை'-அன்புமணி வலியுறுத்தல்

a4246

'US trade war: Stimulus programs needed to prevent losses' - Anbumani stresses Photograph: (pmk)

'இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அமெரிக்க அறிவித்துள்ள 50% வரி விதிப்பு நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், அதன் பாதகங்கள் அப்பட்டமாக தெரியவந்துள்ளன. பல்லாயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு, பல லட்சம் பேருக்கு வேலையிழப்பு என அமெரிக்க வர்த்தகப் போரின் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் நிலையில், அதன் தாக்கத்தை இயன்றவரை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகியுள்ளது' என பாமகவின் அன்புமணி தெரிவித்துள்ளார்.

Advertisment

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'உலகின் பல நாடுகளுடன் வர்த்தகப் போரை நடத்தி வரும் அமெரிக்க முதலில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 25% வரி விதித்தது. இந்த வரி விதிப்பு கடந்த 7ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த அளவுக்கான வரி விதிப்பே இந்திய ஏற்றுமதித் துறையை மிகக் கடுமையாக பாதிக்கும் என்று தொழில்துறையினர் அஞ்சிய நிலையில், இரஷ்யாவிடமிருந்து அதிகளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதற்கு தண்டம் விதிக்கும் வகையில் மேலும் 25% இறக்குமதி வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். இந்த வரி விதிப்பும் நேற்று நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 50% வரி விதிக்கப்படுவதால், இயல்பாக இந்தியப் பொருள்களின் விலை 50%க்கும் கூடுதலாக அதிகரிக்கும். அதே நேரத்தில் வங்காளதேசம், வியட்நாம், கம்போடியா போன்ற பிற ஆசிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆயத்த ஆடை, காலணிகள், தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்களுக்கு 20%க்கும் குறைவான வரியே விதிக்கப்படுவதால் அவற்றின் விலைகள் ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கும். இந்தியப் பொருள்களின் விலை அதிகமாக இருக்கும் என்பதால் அமெரிக்க வணிகர்கள் இந்தியப் பொருள்களை வாங்குவதை நிறுத்தி விட்டனர்.

இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதி மையங்களில் அமெரிக்க மிகவும் முக்கியமானது ஆகும். 2024 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியா ரூ.7.56 லட்சம் கோடி மதிப்பிலான பொருள்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இந்தியாவில் உள்ள சுமார் 2 லட்சம் ஏற்றுமதியாளர்களில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அமெரிக்காவுக்கு மட்டும் தான் பொருள்களை ஏற்றுமதி செய்து வருகின்றனர். அமெரிக்க ஏற்றுமதி அடியோடு நின்று விட்ட நிலையில் இந்திய ஏற்றுமதியாளர்களும், ஏற்றுமதி செய்யப்படும் பொருள் சார்ந்த தொழில் துறைகளும் கடுமையாக பாதிக்கப்படும். பாதிப்புகள் அளவிட முடியாத அளவுக்கு அதிகமாக இருக்கக்கூடும்.

Advertisment

அமெரிக்கா தொடுத்துள்ள வர்த்தகப் போரின் காரணமாக தமிழ்நாடு மிகக் கடுமையாக பாதிக்கப்படும்.  கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இருந்து ஆண்டுக்கு ரூ.73 ஆயிரம் கோடிக்கு ஆடை வகைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. ரூ.15,000 கோடிக்கு பின்னலாடைகள் மட்டும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. இவை அனைத்தும் முற்றிலுமாக முடங்கி விட்டன. அதுமட்டுமின்றி, அமெரிக்க பயன்பாட்டிற்காக தனியாக தயாரிக்கப்பட்ட ஆடைகளை வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியாது என்பதால், அவற்றை வந்த விலைக்கு விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் திருப்பூர் பகுதியில் மட்டும் 2 லட்சத்திற்கும் கூடுதலான தொழிலாளர்கள் வேலை இழக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் தோல்பொருள்களில் 30% அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அங்குள்ள சில நிறுவனங்கள் தங்களின் உற்பத்தியில் 60% பொருள்களை அமெரிக்காவுக்கு அனுப்பி வருகின்றன. அமெரிக்க நடவடிக்கையால் அங்கு 75,000 பேர் வேலை இழப்பர்.

அமெரிக்க நடவடிக்கையால் தமிழ்நாட்டில் பாதிக்கப்படும் இன்னொரு துறை கடல் உணவு ஏற்றுமதித்  துறை ஆகும். தமிழ்நாட்டிலிருந்து மட்டும் அமெரிக்காவுக்கு ஆண்டுக்கு 90 ஆயிரம் டன் சென்னாக்கூனி இறால் பதப்படுத்தப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அமெரிக்கா அதிக வரியை விதித்துள்ள நிலையில்,  தமிழ்நாட்டில்  உள்ள கடல் உணவு ஏற்றுமதி நிறுவனங்கள் தங்களின் உற்பத்தியை பாதியாக குறைத்து விட்டன. அதனால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க வர்த்தகப் போர் காரணமாக நேரடியாக ஏற்படும் பாதிப்புகளை விட இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை பாதிப்புகள் மிகவும் மோசமானதாக இருக்கும். அதிக எண்ணிக்கையில் வேலை  இழப்புகள் ஏற்படுவதால் வறுமையும், அதன் காரணமாக குற்றச் செயல்கள் பெருகும் ஆபத்தும் உள்ளது.

இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, இந்த பாதிப்புகளின் தாக்கத்தை முழுமையாக தடுக்க முடியாது என்றாலும் கூட, இந்தியத் தொழில்துறையினரும், தொழிலாளர்களும் பாதிக்கப்படாத வகையில்  மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 2008 ஆம் ஆண்டு பொருளாதார மந்தநிலையின் போதும், கொரோனா காலத்தின் போதும் தொழில்துறையினருக்கு வழங்கப்பட்டதைப் போல ஊக்குவிப்பு சலுகைகள்  வழங்கப்பட வேண்டும். வங்கிகளுக்கு தொழில் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய கடன் தவணைகள் நிலைமை சீரடையும் வரை நிறுத்தி வைப்பது, அவற்றுக்கான வட்டியை தள்ளுபடி செய்வது, நிலைமை சமாளிக்க அவசர கால கடன் வழங்குவது, வட்டி மானியத்தை அதிகரிப்பது, வரிச் சலுகைகளை உயர்த்துவது உள்ளிட்ட சலுகைகளை மத்திய அரசு வழங்க வேண்டும். அதேபோல், தமிழ்நாட்டில் வேலை இழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு மாதம் குறைந்தது ரூ.5000 உதவி வழங்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

Donad trump America anbumani ramadas pmk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe