கடந்த 2024ஆம் ஆண்டு அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு உலக நாடுகளை கதிகலங்க வைத்தார். குறிப்பாக, உலக நாடுகளுடன் அமெரிக்காவிற்கு நிறைய வரி பற்றாக்குறை இருப்பதாக கூறி  ட்ரம்ப் பல்வேறு உலக நாடுகளுக்கு வரியை விதித்தார். அதன்படி, இந்தியா, சீனா போன்ற வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு பரஸ்பர வரி விதிக்கப்படுவதாக கடந்தாண்டு ஏப்ரல் மாதம் அறிவித்தார்.

Advertisment

அமெரிக்காவின் இந்த கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கையால், பல்வேறு நாடுகளும் அமெரிக்காவுக்கு கண்டனம் தெரிவித்தன. வரிவிதிப்புகள் அறிவிக்கப்பட்டதில் இருந்து உலக அளவில் பங்குச் சந்தைகள் தொடர்ந்து சரிவை சந்தித்தன. இதன் மூலம், உலகில் இருக்கும் தொழிலதிபர்கள் நஷ்டத்தை சந்தித்து வந்தனர். இதனிடையே, டிரம்ப் விதித்த வரிவிதிப்பு நடவடிக்கையை எதிர்த்து அமெரிக்காவில் பல மாகாணங்களில் பல வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான விசாரணை அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

Advertisment

இந்த நிலையில், இந்தியா, சீனா உள்ளிட்ட உலக நாடுகள் மீது டிரம்ப் விதித்த வரிவிதிப்பு செல்லாது என அமெரிக்கா உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. டிரம்ப் விதித்த வரிவிதிப்புக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை இன்று 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தியது. அதில் நீதிபதிகள் தெரிவித்துள்ளதாவது, ‘அதிபர் டிரம்ப் விதித்த வரிகள் சட்டவிரோதமானது. எமர்ஜென்சியை பயன்படுத்தி வரிகளை விதிப்பதற்கு அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அதிகாரம் கிடையாது’ எனத் தெரிவித்து தீர்ப்பு வழங்கினர். அதில் 6 நீதிபதிகள் இந்த வரிகள் செல்லாது எனவும், மூன்று நீதிபதிகள் இந்த வரிவிதிப்பு செல்லும் என தீர்ப்பளித்துள்ளனர். எனவே, பெரும்பான்மையாக 6 நீதிபதிகள் ஒரே தீர்ப்பை வழங்கியுள்ளதால் டிரம்பின் வரிவிதிப்பு ரத்து செய்யப்படுவதாக நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.