கடந்த 2010 ஆம் ஆண்டு ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையே ‘நியூ ஸ்டார்ட்’ என்ற பெயரில் அணு ஆயுத ஒப்பந்தம் கையெழுத்தானது. அணு ஆயுத இருப்பு குறித்தான இந்த ஒப்பந்தத்தின்படி இரு நாடுகளும், 1550 அணு ஆயுதங்களை மட்டுமே வைத்துக்கொள்ளலாம் என்று தீர்மானிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் கடந்த 2021 ஆம் ஆண்டுடன் நிறைவு பெற்றது. இருப்பினும், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தத்தை இரு நாடுகளும் நீடித்துக் கொண்டன. இந்த நிலையில், நீட்டிக்கப்பட்ட இந்த இந்த ஒப்பந்தம் நேற்றுடன் (05-02-26) நிறைவடைந்தது.

Advertisment

இதனிடையே, வரம்பில் மாற்றத்தோடு இந்த ஒப்பந்தத்தை நீட்டிக்க ரஷ்யா, அமெரிக்காவிடம் கோரிக்கை வைத்தது. ஆனால், அமெரிக்க அதிபர் டிரம்ப் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.  இது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில், “அமெரிக்கா உலகின் மிக வலிமையான நாடு. என்னுடைய முதல் ஆட்சிக்காலத்திலேயே நான், எங்கள் நாட்டின் அணு ஆயுதங்கள் உட்பட ராணுவத்தையும் முழுமையாகச் சீரமைத்தேன். அதோடு, ‘ஸ்பேஸ் போர்ஸ்’ அமைப்பை உருவாக்கி இருக்கிறேன். தொடர்ந்து எங்கள் ராணுவத்தை வலிமையாகக் கட்டமைத்து வருகிறேன். அமெரிக்காவின் கடந்த கால மோசமான பேச்சுவார்த்தையின் மூலமாக உருவாக்கப்பட்ட ‘நியூ ஸ்டார்ட்’ என்ற இந்த ஒப்பந்தத்தை நீடிப்பதற்குப் பதிலாக, எதிர்காலத்தில் நீண்ட மற்றும் நவீனமயமாக்கப்பட்ட அணு ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும். அதற்கு நாம் அனுபவம் மிக்க அணு சக்தி நிபுணர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.  

Advertisment

மறுபுறம் சீனாவும் அணு ஆயுத வளர்ச்சியில் கவனம் செலுத்தி வருகிறது. இதனால், உலக அளவில் அணு ஆயுதம் மற்றும் ராணுவ வலிமையில் உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த நாடாகச் சீனா மாறியுள்ளது. இது அமெரிக்காவிற்கு ஒரு வித கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, அணு ஆயுத ஒப்பந்தத்தில் சீனாவும் இணைய வேண்டும் என டிரம்ப் எதிர்பார்க்கிறார். இருப்பினும், இதற்குச் சீனா மறுப்பு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நீண்ட நாட்களாக அணு ஆயுத ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை இழுபறியிலிருந்து வந்தது. இந்த நிலையில், தற்போது ஈரானுடன் அணு ஆயுத ஒப்பந்தம் குறித்து பேச்சு வார்த்தை நடத்த அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.