இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் இறக்குமதி பொருட்களுக்கு பரஸ்பர வரி விதிக்கப்படுவதாக கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்தார். இதில் இந்தியாவுக்கு 26% வரியை டிரம்ப் அறிவித்தார். மேலும், இந்தியா தான் உலக நாடுகளிலேயே அதிக வரி விதிப்பதாக அவர் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார். கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கையை நிறுத்த வேண்டுமென்றால் அனைத்து நாடுகளும் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று கூறி பரஸ்பர வரியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். அதனை தொடர்ந்து, ஆகஸ்ட் 1 முதல் கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கை அமலுக்கு வரும் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, அமெரிக்காவும் இந்தியாவும் பல வாரங்களாக வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், ஆனால் அதற்கு இறுதி முடிவு எட்டப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையில், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான தாக்குதலை நான் தான் நிறுத்தினேன் என்றும், வர்த்தக ஒப்பந்தத்தை முன்னிறுத்தி தான் தாக்குதலை நிறுத்தினேன் என்றும் டொனால்ட் டிரம்ப் செல்லும் இடங்களில் எல்லாம் தொடர்ந்து தம்பட்டம் அடித்து வந்தார். இது இந்த விவகாரம் ஒட்டுமொத்த நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்கா அதிபர் விட்ட எச்சரிக்கைக்கு கட்டுப்பட்டு பாகிஸ்தானுடனான தாக்குதல் நிறுத்தத்துக்கு இந்தியா ஒப்புக்கொண்டதா? என்ற எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். டிரம்ப்பின் கூற்றை இந்தியா மறுத்தபோதிலும், அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து பேசி வருகிறார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/07/30/trumpmodii-2025-07-30-18-38-20.jpg)
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் கடந்த 3 நாட்களாக நடந்த ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் கூட டிரம்ப் பேச்சு குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பினர். ஆனால், பிரதமர் மோடி உள்பட மத்திய அமைச்சர்கள் ஒருவர் கூட அதற்கு பதிலளிக்கவில்லை. உலக தலைவர்கள் யாரும் இந்த தாக்குதலை நிறுத்தவில்லை என மக்களவையில் பிரதமர் மோடி ஆணித்தரமாக பேசிய அடுத்த நாளே, தனது வேண்டுகோளின் பேரில் இந்தியா பாகிஸ்தானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவந்தது என டிரம்ப் 30வது முறை பேசி மீண்டும் பரப்பரப்பை கிளப்பினார். மேலும், இரு நாடுகளும் விரைவில் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யாவிட்டால், இந்திய இறக்குமதிகளுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். இது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
அதனை தொடர்ந்து, ஆகஸ்ட் 1 முதல் இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படுவதாக நேற்று (30-07-25) மாலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்தார். இது குறித்து தனது தளமான ட்ரூத் சோசியலில் அவர் தெரிவித்ததாவது, ‘நினைவில் கொள்ளுங்கள், இந்தியா எங்கள் நண்பராக இருந்தாலும் பல ஆண்டுகளாக நாங்கள் அவர்களுடன் ஒப்பீட்டளவில் சிறிய வியாபாரத்தைச் செய்துள்ளோம். ஏனென்றால், அவர்களின் வரிகள் மிக அதிகமாக உள்ளன. உலகிலேயே மிக உயர்ந்தவைகளில் ஒன்றாகும். மேலும் அவை எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு மிகவும் கடுமையான மற்றும் அருவருப்பான நாணயமற்ற வர்த்தக தடைகளைக் கொண்டுள்ளன. அவர்கள் எப்போதும் தங்கள் ராணுவ உபகரணங்களில் பெரும்பகுதியை ரஷ்யாவிடம் இருந்து வாங்கியுள்ளனர். மேலும் சீனாவுடன் சேர்ந்து ரஷ்யாவின் மிகப்பெரிய எரிசக்தி வாங்குபவர்களில் ஒருவராக உள்ளனர். உக்ரைனில் நடக்கும் கொலைகளை ரஷ்யா நிறுத்த வேண்டும் என்று எல்லோரும் விரும்பும் நேரத்தில் இது எல்லாம் நல்லதல்ல. எனவே, ஆகஸ்ட் 1 முதல் இந்தியா 25% வரி கட்டணத்தையும் அபராதத்தையும் செலுத்தும். இந்தியாவுடன் நமக்கு மிகப்பெரிய வர்த்தகப் பற்றாக்குறை உள்ளது’ எனப் பதிவிட்டார். டிரம்ப் அறிவிப்புக்கு பதிலளிக்கும் விதமாக, விவசாயிகள் தொழில்முனைவோர் மற்றும் எம்.எஸ்.எம்.இ (MSME)களின் நலன்களைப் பாதுகாக்க உறுதியான நடவடிக்கையை எடுக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இது குறித்து தெரிவித்ததாவது, ‘சில மாதங்களாக இந்தியாவும் அமெரிக்காவும் நியாயமான, சமநிலையான மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை முடிப்பது குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளன. அந்த நோக்கத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்’ எனத் தெரிவித்தது.
இந்த நிலையில், அமெரிக்கா தற்போது இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்திய இறக்குமதிகளுக்கு கூடுதல் அபராதங்களுடன் 25% வரி விதித்த பிறகு வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய டிரம்ப், “ உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா தொடர்ந்து இருக்கிறது. ஆனால், நாங்கள் இப்போது அவர்களுடன் பேசி வருகிறோம். என்ன நடக்கிறது என்று பார்ப்போம். இந்தியா உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாகும். 100%, 150% என அதிகமாக விதிக்கப்படுகிறது. அவர்கள் 175%ஐ விட அதிகமாக வரி விதிக்கின்றனர். நாங்கள் இப்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அவர்கள் பிரிக்ஸ் அமைப்பிலும் இருக்கிறார்கள். அமெரிக்காவிற்கு எதிரான நாடுகளின் குழுவில் இந்தியாவும் உறுப்பினராக உள்ளது. அந்த அமைப்பு அமெரிக்க டாலர் மீது தாக்குதல் நடத்த முயற்சிக்கிறது. டாலரை யாரும் தாக்க நாங்கள் அனுமதிக்கப் போவதில்லை. உங்களுக்குத் தெரியும், பிரதமர் மோடி எனது நண்பர். ஆனால் அவர்கள் எங்களுடன் வணிக ரீதியாக அதிகம் வியாபாரம் செய்வதில்லை. அவர்கள் நம்மிடம் நிறைய விற்கிறார்கள், ஆனால் நாம் அவர்களிடமிருந்து வாங்குவதில்லை. ஏன் தெரியுமா? ஏனென்றால் வரி மிக அதிகமாக உள்ளது. இப்போது அவர்கள் அதை கணிசமாகக் குறைக்கத் தயாராக உள்ளனர். ஆனால் என்ன நடக்கிறது என்று பார்ப்போம். இப்போது இந்தியாவுடன் பேசிக்கொண்டிருக்கிறோம். என்ன நடக்கிறது என்று பார்ப்போம்” என்று கூறினார்.