இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு அமெரிக்காவில் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 25% வரி விதிக்கப்பட்டு வருகிறது. இதற்கான உத்தரவை அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்தியாவுக்கான வரியை மேலும் உயர்த்த உள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ரஷ்யாவிடமிருந்து  எண்ணெய்யை வாங்கி அதனைச் சந்தையில் விற்கும் பொழுது அதிக அளவில் இந்தியா வருவாய் ஈட்டுகிறது. எனவே ரஷ்யாவிலிருந்து அதிக அளவிலான எண்ணெய்யை வாங்குவதால் இந்தியாவின் மீதான வரி மேலும் அதிகரிக்கப்படும். ரஷ்யாவின் தாக்குதல் காரணமாக உக்ரைன் நாட்டு மக்கள் கொல்லப்படுவதை இந்தியா கருத்தில் கொள்ளவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

அதிபர் டிரம்ப்பின் இந்த அறிவிப்புக்கு இந்தியா சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “வரிவிதிப்பில் அமெரிக்கா நியாயமற்ற வகையில் நடந்துகொள்கிறது. இந்தியாவைக் குறிவைக்கும் அமெரிக்கா ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் தேச நலன் காக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.