இந்தியா, சீனா போன்ற வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு பரஸ்பர வரி விதிக்கப்படுவதாக கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்தார். இதற்கு பல்வேறு நாடுகளும் அமெரிக்காவுக்கு கண்டனம் தெரிவித்தன. வரிவிதிப்புகள் அறிவிக்கப்பட்டதில் இருந்து உலக அளவில் பங்குச் சந்தைகள் தொடர்ந்து சரிவை சந்தித்தன. இதன் மூலம், உலகில் இருக்கும் தொழிலதிபர்கள் நஷ்டத்தை சந்தித்து வந்தனர். இதனால் விதிக்கப்பட்ட பரஸ்பர வரியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். அதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 1ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.

இதனிடையே, உக்ரைன் போர் விவகாரத்தில் உலக நாடுகளிடம் இருந்து ரஷ்யாவைத் தனிமைப்படுத்த டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், ரஷ்யாவுடன் வர்த்தகம் வைத்துள்ள நாடுகள் மீது அதிக வரி விதிக்கும் மசோதாவை கொண்டு வந்தார். அதன்படி, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு 500% இறக்குமதி வரி விதிக்க வழிவகை செய்யும் மசோதாவுக்கு அமெரிக்கா நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்திருந்தது. இந்த மசோதா விரைவில் அமலுக்கு வரவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, இந்தியாவுடன் மிகப்பெரிய ஒப்பந்தம் செய்யப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து பேசி வருகிறார்.

அதன்படி, அமெரிக்காவும் இந்தியாவும் பல வாரங்களாக வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதித்து வருவதாகவும், ஆனால் அதற்கு இறுதி முடிவு எட்டப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. அமெரிக்கப் பொருட்களை இந்திய சந்தையில் அதிக அளவில் அணுக வேண்டும் என்று டிரம்ப் அழுத்தம் கொடுத்து வருகிறார். மற்ற வர்த்தக பேச்சுவார்த்தைகளிலும் அவர் அடிக்கடி இதே போன்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். இதனிடையே, நேற்று (29-07-25) காலை இறக்குமதி பொருட்களுக்கு 25% வரிகளை இந்தியா எதிர்கொள்ள நேரிடும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். ஸ்காட்லாந்திலிருந்து வாஷிங்டனுக்குத் திரும்பும் வழியில் ஏர் ஃபோர்ஸ் ஒன்னில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப்பிடம், இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த டொனால்ட் டிரம்ப், “இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை. ஏனென்றால் மற்ற நாட்டை விட இந்தியா அதிக வரிகளை விதிக்கிறது. இருநாடுகளும் விரைவில் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய முடியாவிட்டால், இந்திய இறக்குமதிகளுக்கு 25% வரி விதிக்கப்படும்” என்று கூறினார். இதனையடுத்து இந்தியாவுக்கு 20% முதல் 25% வரை விதிகள் விதிக்கப்படுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த டிரம்ப், “ஆம், நான் அப்படித்தான் நினைக்கிறேன்” என்று கூறினார்.

இந்த நிலையில், ஆகஸ்ட் 1 முதல் இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது தளமான ட்ரூத் சோஷயலில் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளதாவது, ‘நினைவில் கொள்ளுங்கள், இந்தியா எங்கள் நண்பராக இருந்தாலும் பல ஆண்டுகளாக நாங்கள் அவர்களுடன் ஒப்பீட்டளவில் சிறிய வியாபாரத்தைச் செய்துள்ளோம். ஏனென்றால், அவர்களின் வரிகள் மிக அதிகமாக உள்ளன. உலகிலேயே மிக உயர்ந்தவைகளில் ஒன்றாகும். மேலும் அவை எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு மிகவும் கடுமையான மற்றும் அருவருப்பான நாணயமற்ற வர்த்தக தடைகளைக் கொண்டுள்ளன. அவர்கள் எப்போதும் தங்கள் ராணுவ உபகரணங்களில் பெரும்பகுதியை ரஷ்யாவிடம் இருந்து வாங்கியுள்ளனர். மேலும் சீனாவுடன் சேர்ந்து ரஷ்யாவின் மிகப்பெரிய எரிசக்தி வாங்குபவர்களில் ஒருவராக உள்ளனர். உக்ரைனில் நடக்கும் கொலைகளை ரஷ்யா நிறுத்த வேண்டும் என்று எல்லோரும் விரும்பும் நேரத்தில் இது எல்லாம் நல்லதல்ல. எனவே, ஆகஸ்ட் 1 முதல் இந்தியா 25% வரி கட்டணத்தையும் அபராதத்தையும் செலுத்தும். இந்தியாவுடன் நமக்கு மிகப்பெரிய வர்த்தகப் பற்றாக்குறை உள்ளது’ எனப் பதிவிட்டுள்ளார்.

Advertisment

சில தினங்களுக்கு முன்பு ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகத்தில் ஈடுபட்டால் இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகள் கடும் பொருளாதார தடையை சந்திக்க நேரிடும் ‘நேட்டோ’ (NATO) அமைப்பு எச்சரிக்கை விடுத்தது. ராணுவ ஒத்துழைப்புக்கான நேட்டோ அமைப்பில் இணைவதற்கு உக்ரைன் விரும்பியது. ஆனால், ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்ததால் ரஷ்யா - உக்ரைன் இடையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார். இது தொடர்பாக அவர், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் பலகட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடையை விதித்தது. ஆனால் சீனா, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட சில நாடுகள் கச்சா எண்ணெய், ஆயுதங்கள் போன்றவற்றை வாங்கி ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக ரஷ்யாவின் ஒட்டுமொத்த எண்ணெய் ஏற்றுமதியில் இந்தியா சுமார் 15% பங்களிப்பை கொண்டுள்ளது. இந்த சூழ்நிலையில், ‘நேட்டோ’ அமைப்பின் பொது செயலாளரும், நெதர்லாந்தின் முன்னாள் பிரதமருமான மார்க் ரூட்டே எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.