இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு அமெரிக்காவில் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 25% வரி விதிக்கப்படும் என அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்தியப் பொருட்கள் மீது மேலும் 25% வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க அறிவித்துள்ளது. ஏற்கனவே 25% வரி விதிக்கப்பட்ட நிலையில் கூடுதலாக 25% வரியை அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் விதித்துள்ளார். இதன் மூலம் இந்தியப் பொருட்கள் மீதான வரியை 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. வரும் 31ஆம் தேதி (31.08.2025) பிரதமர் மோடி சீனா செல்ல உள்ளதாக அறிவிப்பு வெளியான நிலையில் கூடுதலாக 25% வரி விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதே சமயம் இந்தியா ஒரு நல்ல வர்த்தக நண்பனாக இல்லை என நேற்று முன்தினம் (05.08.2025) அதிபர் டிரம்ப் கூறியிருந்ததும் கவனிக்கத்தக்கது. ஆசிய நாடுகளிலேயே இந்தியாவுக்குத் தான் அதிக வரியை அமெரிக்கா விதித்துள்ளது. அதாவது சீனாவுக்கு 30 சதவீதமும், பாகிஸ்தானுக்கு 19% சதவீதமும் வரி விதிக்கப்பட்டுள்ளது. வரிவிதிப்பு தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், “இந்தியாவுக்கு மேலும் 25% வரி வித்த அதிபர் ட்ரம்ப்பின் அறிவிப்பு துரதிருஷ்டவசமானது. கூடுதல் வரிவிதிப்பு நியாயமற்றது. வரிவிதிப்பு தொடர்பான அறிவிப்பு மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. இருப்பினும் தேச நலனைக் காக்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளது.
மேலும் மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, “அநியாயமான வணிக ஒப்பந்தத்தை ஏற்க வைக்கும் மிரட்டல் முயற்சியே 50% வரிவிதிப்பு ஆகும். பிரதமர் மோடி தனது பலவீனத்திற்கு இந்திய மக்களின் நலன்களைப் பழியாக்கக் கூடாது” எனக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக அதிபர் டிரம்ப் இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “ரஷ்யாவிடமிருந்து எண்ணெய்யை வாங்கி அதனைச் சந்தையில் விற்கும் போது அதிக அளவில் இந்தியா வருவாய் ஈட்டுகிறது. எனவே ரஷ்யாவில் இருந்து அதிக அளவிலான எண்ணெய்யை வாங்குவதால் இந்தியாவின் மீதான வரி மேலும் அதிகரிக்கப்படும். ரஷ்யாவின் தாக்குதல் காரணமாக உக்ரைன் நாட்டு மக்கள் கொல்லப்படுவதை இந்தியா கருத்தில் கொள்ளவில்லை” எனத் தெரிவித்திருந்தார்.