நாடு கடத்தப்படும் எலான் மஸ்க்?; டொனால் டிரம்ப் சொன்ன அதிர்ச்சி பதில்!

trumpelon

US President Donald Trump's response on questioned Elon Musk to be deported?

கடந்தாண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில், டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்று அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்தாண்டு ஜனவரியில் பதவியேற்றுக் கொண்டார். இந்த அதிபர் தேர்தலில், உலகின் பெரும் பணக்காரரும், டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓவான எலான் மஸ்க், டொனால்ட் டிரம்புக்கு ஆதராவாக பிரச்சாரம் செய்தார். மேலும், இந்த தேர்தலை எதிர்கொள்ள டொனால்ட் டிரம்புக்கு ஆயிரக்கணக்கான கோடியை எலான் மஸ்க் செலவிட்டதாகக் கூறப்பட்டது. இதன் காரணமாகவே, டிரம்ப் அதிபராக வெற்றி பெற்றார் என்று தகவல் வெளியாகியிருந்தது.

அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, தனது அரசாங்க செயல்திறன் துறையின் தலைவராக (DOGE) எலான் மஸ்க்கை டிரம்ப் நியமித்தார். இது, அந்நாட்டில் பெரும் விவாதப் பொருளாக மாறியது. அமெரிக்க அரசின் செயல்திறன் துறை (DODGE) தலைவராகப் பொறுப்பேற்றப் பிறகு, அரசின் தேவையற்ற செலவை கண்டுபிடித்து அதனை கட்டுப்படுத்தும் வேலையை செய்து வந்தார். அதில், அரசுத் துறையை ஒட்டுமொத்தமாக கலைத்துவிட்டு புதிதாக உருவாக்க வேண்டும் என்று கூறினார். ஏற்கெனவே அமெரிக்க அரசுத் துறை ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு கொடுத்து அவர்களை எலான் மஸ்க் வெளியேற்றி வந்த நிலையில், எலான் மஸ்கின் இந்த கருத்து அரசு ஊழியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியது. எலான் மஸ்க் எடுக்கும் நடவடிக்கைகள் அனைத்தும், அமெரிக்க மக்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது. எலான் மஸ்கிற்கு எதிராகவும், டெஸ்லா நிறுவனத்திற்கும் எதிராகவும் நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தது.

இந்த சூழ்நிலையில், பல்வேறு பொருளாதார செலவினங்களை மாற்றியமைக்கும் ‘பிக் பியூடிஃபுல்’ (Big Beautiful) சட்ட மசோதாவை டொனால்ட் டிரம்ப் கொண்டு வந்தார். இந்த மசோதாவில், வரி சீர்திருத்தங்களை நீட்டிப்பது, வரிச்சலுகை அளிப்பது, குடியேற்றம் தொடர்பான நடைமுறைகளை கடுமையாக்குவது, மின்சார வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கான வரி சலுகைகளையும் ரத்து செய்வது ஆகியவை இடம் பெற்றுள்ளது. இந்த மசோதா கூடிய விரைவில் நிறைவேற இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்த மசோதா, பட்ஜெட் பற்றாக்குறையை அதிகரிக்கும் என்றும், DOGE குழுவின் பணியை குறைத்து மதிப்பிடும் என்றும் எலான் மஸ்க் தெரிவித்தார். முதல் முறையாக டொனால்ட் டிரம்பின் முடிவுக்கு மாற்று கருத்து சொன்ன எலான் மஸ்க், ‘DOGE’ அமைப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனை தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - எலான் மஸ்க் இடையே வார்த்தை மோதல் அதிகரித்தது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தனர்.

இதனிடையே, எலான் மஸ்க் அமெரிக்காவில் புதிய கட்சி தொடங்க இருப்பதாகவும், அதற்கு ‘தி அமெரிக்கா பார்ட்டி’ என பெயர் வைக்க திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது. அதனை தொடர்ந்து, எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா ஆகிய நிறுவனங்கள் தனது அரசின் ஆதரவை இழக்கலாம் என்று டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார். இதையடுத்து, டொனால்ட் டிரம்ப் பொய் கூறி வருவதாகவும், அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு இருப்பதாகவும் எலான் மஸ்க் கடுமையாக அவரை விமர்சித்தார். இதனால், இருவருக்கும் இடையே வார்த்தை மோதல் அதிகரித்து வந்த நிலையில், திடீரென்று எலான் மஸ்க், டொனால்ட் டிரம்ப்பிடம் வருத்தம் தெரிவிப்பதாகத் தெரிவித்தார்.

இந்த நிலையில், மின்சார வாகனங்களுக்கான நுகர்வோர் வரிச் சலுகையை ரத்து செய்யும் மசோதாவை டொனால்ட் டிரம்ப் கொண்டு வந்தார். இந்த மசோதாவிற்கு எலான் மஸ்க் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதில் கோபமடைந்த டிரம்ப், தன்னுடைய கடைகளை மூடிவிட்டு தனது சொந்த நாடான தென்னாப்பிரிக்காவுக்கு எலான் மஸ்க் செல்ல வேண்டியிருக்கும் என்று விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “எலான் மஸ்க் என்னை அதிபர் பதவிக்கு ஆதரிப்பதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, நான் மின்சார வாகனங்களுக்கான மின்சார வாகன ஆணைக்கு கடுமையாக எதிர்க்கிறேன் என்பது அவருக்குத் தெரியும். இது அபத்தமானது. அது எப்போதும் என் பிரச்சாரத்தின் ஒரு முக்கிய பகுதியாக இருந்தது. மின்சார வாகனங்கள் பயனுள்ளது தான். ஆனால் எல்லோரும் ஒன்றை வைத்திருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தக்கூடாது. வரலாற்றில் இதுவரை யாரும் அனுபவிக்காத அளவிலான வரிச்சலுகையை எலான் மஸ்க் அனுபவித்துள்ளார். வரிச் சலுகை இல்லாவிட்டால், எலான் கடையை மூடிவிட்டு தென்னாப்பிரிக்காவுக்குத் திரும்பிச் செல்ல வேண்டியிருக்கும். இனி ராக்கெட் ஏவுதல்கள், செயற்கைக்கோள்கள் அல்லது மின்சார கார் உற்பத்தி இருக்காது. நம் நாடு ஒரு அதிர்ஷ்டத்தை மிச்சப்படுத்தும். பெரிய பணம் சேமிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய டொனால்ட் டிரம்ப்பிடம், எலான் மஸ்க்கை நாடு கடத்தப் போகிறீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த டிரம்ப், “அவரை நாடு கடத்த முடியுமா என தெரியாது. இதற்கான சாத்தியக்கூறுகளை நாம் பார்க்க வேண்டும். எலானை  DOGEஐ பார்க்க சொல்ல வேண்டும். DOGE என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? அது ஒரு அசுரனைப் போன்றது. அது எலான் மஸ்க் பின் சென்று அவரை சாப்பிடக்கூட செய்யலாம். அது பயங்கரமாக இருக்கும் இல்லையா? அவருக்கு நிறைய வரிச்சலுகை கிடைக்கின்றன” என்று பேசினார். இதற்கு தனது எக்ஸ் பதிலளித்த எலான் மஸ்க், “இதைப் பெரிதாக்க ரொம்ப ஆசையா இருக்கு. ரொம்ப ஆசையா இருக்கு. ஆனா இப்போதைக்கு நான் அதைத் தவிர்க்கிறேன்” என்று பதிவிட்டார். 

America donald trump elon musk
இதையும் படியுங்கள்
Subscribe