ரஷ்யாவுடன் இந்தியா கச்சா எண்ணெய் வர்த்தகம் செய்துள்ளதாகவும், இந்தியா மிக அதிகமான வரி விதிப்பதாகவும் கூறி இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1 முதல் 25% வரி விதிக்கப்படுவதாக கடந்த ஜூலை 30ஆம் தேதி மாலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்தார். அமெரிக்காவில் இருந்து பால், நெய், கோதுமை, சோயாபீன்ஸ், ஆப்பிள், திராட்சை, சோளம் உள்ளிட்ட வகைகளை இந்தியாவில் விற்பனை செய்ய அந்த நாடு அனுமதி கோரியதாகவும், இவை அனைத்தும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவு தாணியங்கள் அதனால் இந்தியாவின் விவசாயிகள் நலன் பாதிக்கப்படும் என்று இந்தியா கூறி அதற்கு மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில், இந்தியா பொருட்களுக்கு 25% வரி விதிப்பு அறிவிப்பு நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகள் மீது அமெரிக்கா விதித்துள்ள புதிய வரி விதிப்பு வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. அதனை தொடர்ந்து, இரு நாடுகளுக்குள் ஏற்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், கூடுதல் வரியாக 25 சதவீதத்தை உயர்த்தி இந்தியாவுக்கு மொத்தமாக 50% வரி விதிப்பதாக டிரம்ப் கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி அதிரடியாக அறிவித்தார். இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் 25% வரி ஆகஸ்ட் 27ஆம் தேதி அமலுக்கு வரவுள்ளதாகக் கூறப்பட்டது. இதனிடையே, இந்தியாவும் அமெரிக்காவும் வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்த பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடத்தின. ஆனால், அந்த பேச்சுவார்த்தையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
அதே சமயம், ரஷ்யாவிடம் இருந்து கச்சா இறக்குமதி வாங்குவதை நிறுத்த வேண்டும் என இந்தியாவுக்கு அமெரிக்கா தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வந்தது. ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த இந்தியா தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது. எந்த காரணத்தை கொண்டும் ரஷ்யாவிடமிருந்து பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்வதில் எந்த மாற்றமும் இருக்காது தேவைப்பட்டால் கூடுதலாக இறக்குமதி செய்வோம். இந்திய நாட்டு மக்களின் நலனை எங்களுக்கு பிரதானமானது என்று இந்தியா தனது நிலைப்பாட்டை ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டது. இந்த சூழ்நிலையில், இந்தியப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 50% வரி கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி அமலுக்கு வந்தது. இந்த வரி விதிப்பு நடவடிக்கையால், நாட்டின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், பங்கு சந்தை கடும் சரிவை சந்தித்து வருகிறது.
இந்த நிலையில், டிரம்ப்பின் வரிவிதிப்பு சட்டவிரோதமானது என அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அவசர சட்டங்கள் மூலம் வரி விதித்து டிரம்ப் தனது அதிகாரத்தை மீறி வருகிறார் என அமெரிக்க நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனு மீதான விசாரணையின் போது, ட்ரம்பின் உலகளாவிய வரி விதிப்பு முறை சட்ட விரோதமானது என்றும், தேசிய அவசர நிலை அறிவிக்கவோ, பிற நாடுகள் மீது வரி விதிக்கவோ ட்ரம்புக்கு அதிகாரம் இல்லை என்றும் அமெரிக்க நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.