ஈரானின் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி காமேனி (வயது 86) அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார். இதன் காரணமாக ஈரானில் 40 நாட்கள் பொது துக்கம் அனுசரிக்கப்படும் எனவும், 7 நாட்கள் பொது விடுமுறையும் விடப்படுகிறது என அறிவிக்கப்பட்டது. அதே போன்று ஈரான் ராணுவத்தின் தலைமைத் தளபதி சையித் அப்தோல்ரஹீம் மௌசவி, ஈரானின் பாதுகாப்பு அமைச்சர் அஸீஸ் நாசிர்ஸதேஹ் ஆகியோரும் அமெரிக்க - இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஈரான் அரசு உறுதி செய்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் ஈரானின் உச்சபட்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டதற்கு, அமெரிக்காவைக் கண்டித்து பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மீது மக்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். அதாவது அமெரிக்கத் தூதரகத்தின் வெளிப்புற சுவரை உடைத்து உள்ளே நுழைந்த போராட்டக்காரர்களுக்கும், பாகிஸ்தான் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு அசாதாரண சூழல் ஏற்பட்டது. இந்த மோதலில் சுமார் ஒன்பது பேர் உயிரிழந்ததாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். அங்கு நிலவும் சூழலைக் கட்டுக்குள் கொண்டுவருதற்காக ஏராளமான காவல் துறையினர் மற்றும் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
அதோடு அமெரிக்கத் தூதரகத்திற்குள் நுழைந்த அந்த பொதுமக்களும், போராட்டக்காரர்களும் வெளியேற்றப்பட்டனர். முன்னதாக வான்வழித் தாக்குதலையொட்டி அமெரிக்கா சார்பில் தூதரகங்களில் பணியாற்றுபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதில் தூதரகங்களில் பணியாற்றுக் கூடிய அமெரிக்கர்கள் வெளியில் செல்லக்கூடாது எனவும், மிக முக்கியமாக அவர்கள் தங்களது சீருடையில் எங்கும் வெளியே செல்லக்கூடாது தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Follow Us