வெனிசுலா தலைநகர் கராகஸ் நகரின் பல்வேறு பகுதிகளில் அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இன்று அதிகாலை வெனிசுலா நாட்டின் பல்வேறு இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் அரங்கேறி கட்டிடங்கள் தீப்பிடித்து சேதமடைந்துள்ளது. குறிப்பாக லாகார்லோட்டா விமான நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டு கரும்புகை கிளம்பியதால் அந்நாட்டு மக்கள் பீதியடைந்துள்ளனர்.

Advertisment

இன்று அதிகாலை 2 மணியளவில் அந்நாட்டின் தலைநகர் கராகஸைச் சுற்றி பல வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும், நகரின் தெற்குப் பகுதியான ஒரு பெரிய இராணுவத் தளத்திற்கு அருகில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், மிராண்டா, அரகுவா மற்றும் லா குவைரா ஆகிய இடங்களிலும் வான்வழித் தாக்குதல்கள் நடந்ததாக கூறப்படுகிறது. வெனிசுலா மீது நடந்த தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

அமெரிக்கா தான் இந்த ராணுவத் தாக்குதலை நடத்தியிருக்கிறது என வெனிசுலா அரசு குற்றம் சாட்டியிருந்த நிலையில், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை சிறைப்பிடித்து நாடு கடத்தியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது குறித்து டிரம்ப் தெரிவிக்கையில், “வெனிசுலாவிற்கு எதிராகவும், அதன் தலைவர் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவிற்கு எதிராகவும் அமெரிக்கா ஒரு பெரிய அளவிலான தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியது. அவர் தனது மனைவியுடன் கைது செய்யப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கை அமெரிக்க சட்ட அமலாக்கத்துடன் இணைந்து செய்யப்பட்டது. விவரங்கள் தொடர்ந்து வரும்” என்று தெரிவித்துள்ளார்.

வெனிசுலாவில் இருந்து கப்பல்கள் வழியாகவும் படகுகள் வழியாகவும் அமெரிக்காவுக்குள் போதைப்பொருள் கடத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இதனால் கடந்த சில நாட்களாகவே, கரீபியன் கடல் பகுதியில் ராணுவத்தை குவித்து ராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா எடுத்து வருகிறது. குறிப்பாக, அமெரிக்க ராணுவம் கரீபியன் கடல் பகுதியில் வெனிசுலா கப்பல்கள் மீது தாக்கல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், வெனிசுலாவில் தாக்குதல் நடத்திய அமெரிக்கா, அந்நாட்டு அதிபரை சிறைப்பிடித்துள்ளது. 

Advertisment