மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக வளைகுடா பகுதியில் உள்ள ஹார்மோஸ் நீரிணை பாதையை ஈரான் தடுத்து வைத்துள்ளது. இதன் காரணமாக, அரபு நாடுகளில் இருந்து வரும் கச்சா எண்ணெய் கப்பல்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், இந்தியா மற்றும் சுற்றியுள்ள நாடுகளின் எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்வதில் சிக்கல் ஏற்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது. ஏற்கனவே, இன்னும் 25 நாட்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.

Advertisment

இருப்பினும், இந்த போர் முடிவிற்கு வராமல், தொடரும் பட்சத்தில் எண்ணெய் கப்பல்கள் இந்தியா வந்தடைவதில் சிக்கல் ஏற்படும். இதன் விளைவாக நாடு முழுவதும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதனிடையே, சமீபத்தில் ரஷ்ய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்தியா விரும்பினால் கச்சா எண்ணெய்யை வழங்கத் தயாராக உள்ளோம். 91 லட்சம் பீப்பாய் எண்ணெய் தாங்கிய கப்பல் ஒரு வாரத்தில் இந்தியாவை வந்தடையும்’ என்று தெரிவித்திருந்தார்.  

Advertisment

இந்த நிலையில், ரஷ்யாவிடம் இருந்து 30 நாட்களுக்கு இந்தியா எண்ணெய் வாங்கலாம் என அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்து அமெரிக்க நிதித்துறைச் செயலர் ஸ்கொட் பெசன்ட், “அதிபர் ட்ரம்ப்பின் எண்ணெய் வள மேம்பாடு முயற்சியின் காரணமாக இதுவரை இல்லாத அளவிற்கு எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி அதிகரித்துள்ளது. உலக சந்தையில் அனைவருக்கும் தொடர்ந்து எண்ணெய் கிடைக்க வேண்டும். ஆனால், தற்போது ஹார்மோஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால், எண்ணெய் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால், இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் தற்காலிகமாக 30 நாட்களுக்கு ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கிக் கொள்ளலாம். மேலும், இந்தியா அமெரிக்காவின் பங்காளியாகும். வருங்காலத்தில் அமெரிக்க எண்ணெய் கொள்முதலை இந்தியா அதிகரிக்கும் என்று நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பலரும் கடும் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க இந்தியாவிற்கு அனுமதி கொடுக்க அமெரிக்கா யார்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது குறித்து, காங்கிரஸ் தனது எக்ஸ் தளப்பக்கத்தில், ‘பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம், இந்தியா யாரிடம் எண்ணெய் வாங்க வேண்டும்? யாரிடம் வாங்கக் கூடாது? என்பதை, அமெரிக்கா தீர்மானிக்கும் இடத்திற்குக் கொண்டு சென்றுள்ளது. இந்த முடிவைப் பிரதமர் நரேந்திர மோடியோ அல்லது இந்திய அரசாங்கமோ எடுக்க முடியவில்லை. நாங்கள் ஒரு இறையாண்மை மிக்க சுதந்திரமான நாடு. நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை. நாங்கள் யாரிடம் எண்ணெய் வாங்கவேண்டும் என்பதைத் தீர்மானிக்க அமெரிக்கா யார்? என நாட்டின் குடிமக்கள் கேட்கிறார்கள். ஆனால், இதை நரேந்திர மோடியால் கேட்க முடியாது. ஏனென்றால், அவர் அமெரிக்காவிடம் நமது நாட்டை அடமானம் வைத்துவிட்டார். இது வெட்கக்கேடானது’ என்று காட்டமாக விமர்சித்துள்ளது.

Advertisment

முன்னதாக, ரஷ்யாவிடம் இருந்து இந்தியா பெருமளவிலான கச்சா எண்ணெயை கொள்முதல் செய்து வந்தது. ஆனால், இதற்கு, அமெரிக்க கடும் எதிர்ப்பை தெரிவித்தது. அதன் காரணமாக, இந்தியா மீது 50 சதவீதம் அளவிற்கு வரியை உயர்த்தியது. இது இந்தியப் பொருளாதாரத்தில் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. தொடர்ந்து இது குறித்துப் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். அமெரிக்காவிடம் தான் எண்ணெய் வாங்க வேண்டும். இல்லையெனில், இந்தியா மீதான வரியை 500 சதவீதம் வரை கூட உயர்த்துவோம் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்துக் கொள்வதாக இந்தியா ஒப்புக்கொண்டது. இதன் காரணமாக இந்தியா மீதான வரியை 18 சதவீதமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குறைத்தார். இந்த சூழ்நிலையில், அமெரிக்காவே மீண்டும் இந்தியாவை ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கக் கூறும் நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.