Uproar in Lok Sabha because Rahul Gandhi's speech about RSS
இந்தாண்டுக்கான நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 1ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில், எஸ்.ஐ.ஆர் விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் இந்த விவகாரம் தொடர்பாக நாளை (09-12-25) மற்றும் நாளை (10-12-25) விவாதம் நடைபெறவுள்ளது. இதற்கிடையில், மத்திய பா.ஜ.க அரசு பல்வேறு மசோதாக்களை தாக்கல் செய்து நிறைவேற்றி வருகிறது.
இந்த நிலையில், எஸ்.ஐ.ஆர் குறித்த சிறப்பு விவாதத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி இன்று (09-12-25) மக்களவையில் பேசினார். அப்போது அவர், “ஜனவரி 30, 1948 அன்று, மகாத்மா காந்தியை நாதுராம் கோட்சே துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தார். இன்று நமது நண்பர்கள் அவரை தள்ளிவிட்டார்கள். இது ஒரு சங்கடமான உண்மை. அந்தத் திட்டம் அங்கு முடிவடையவில்லை. அது வாக்குப்பதிவில் நடந்துள்ளன. அனைத்து நிறுவன அமைப்புகளையும் ஆர்.எஸ்.எஸ் கைப்பற்றிவிட்டது. காந்திஜியின் படுகொலைக்குப் பிறகு, அவர்களின் திட்டத்தின் அடுத்த கட்டம் இந்தியாவின் நிறுவன கட்டமைப்பை ஒட்டுமொத்தமாகக் கைப்பற்றுவதாகும்” என்று கூறினார்.
ஆர்.எஸ்.எஸ், கோட்சே பற்றி பேசியதால் உடனே ஆளுங்கட்சி எம்.பிக்கள் கூச்சலிட்டு அமளியில் ஈடுபட்டனர். அப்போது மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லா, அவர்களை அமைதியாக இருக்கும்படி வேண்டுகோள் விடுத்தார். ஆனாலும் ஆளுங்கட்சி எம்.பிக்கள் விடாமல் கூச்சலிட்டனர். இதையடுத்து பேசிய ராகுல் காந்தி, “எந்த சமயம், சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் அனைவரும் சமம் என்பதை ஆர்.எஸ்.எஸ். நம்புவதில்லை. இந்தியாவின் அமைப்பு முறையை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசின் நடவடிக்கை உள்ளது.
சமத்துவத்தை எப்போதும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நம்புவதில்லை. துணைவேந்தர்கள் முதல் பேராசியர்கள் வரை அனைத்து பொறுப்புகளையும் ஆர்.எஸ்.எஸ் கைப்பற்றியுள்ளது. பா.ஜ.க அரசு எல்லாவற்றையும் பேச மட்டுமே செய்கிறது, ஆனால் செயலில் ஒன்றுமில்லை” என்று கூறினார். ஆனாலும் ஆளுங்கட்சி எம்.பிக்களான பா.ஜ.கவினர் விடாமல் கூச்சலிட்டதால் மக்களவையில் சிறிது நேரம் சலசலப்பானது.
Follow Us