ஈரோட்டில் வாரந்தோறும் திங்கட்கிழமை இரவில் ஜவுளிச்சந்தை கூடுகிறது. இந்த சந்தைக்கு ஈரோடு மட்டுமின்றி வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான வியாபாரிகள் வந்து கடைகளை அமைத்து வருகின்றனர். அனைத்து வகையான ஜவுளியும் ஒரே இடத்தில் கிடைப்பதால் பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வந்து ஜவுளியை கொள்முதல் செய்கின்றனர்.
இந்நிலையில் நேற்று (16/௦2025) இரவில் கூடிய சந்தையிலும் ஆயிரக்கணக்கான வியாபாரிகள் கடைகளை அமைத்து இருந்தனர். இதில், ஜவுளி உற்பத்தியாளர்கள் பலர் நேரடியாக வந்து கடைகளை அமைத்தனர். ஈரோடு, திருப்பூர், கோவை, சேலம், கரூர், நாமக்கல், திண்டுக்கல், திருச்சி, மதுரை, தேனி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர். வெளியூர் வியாபாரிகள் அதிகளவில் குவிந்ததால் ஜவுளிச்சந்தை களைக்கட்டியது.
இதுகுறித்து ஜவுளிச்சந்தையில் கடை அமைத்திருந்த திருப்பூரை சேர்ந்த வியாபாரி கூறியதாவது, 'தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் (அக்டோபர்) 20-ம் தேதி கொண்டாடப்படுகிறது. 35 நாட்களே இருப்பதால் வியாபாரிகள் ஜவுளியை கொள்முதல் செய்வதற்காக வந்தனர். அவர்கள் மொத்தமாக ஜவுளியை கொள்முதல் செய்தனர். இதனால் கடந்த வாரங்களை காட்டிலும் விற்பனை தீவிரம் அடைந்தது. இனி வரும் வாரங்களிலும் ஜவுளி வியாபாரம் விறுவிறுப்பு அடையும். பண்டிகை காலம் என்பதால் புதிய டிசைன் ஆடைகள் சந்தைக்கு வந்துள்ளன. இதனால் சந்தையில் ஆடைகளை வாங்குவதற்காக பொதுமக்களும் திரண்டு வந்தனர். இதனால் மொத்த வியாபாரத்தை போலவே சில்லறை விற்பனையும் நடந்தது இவ்வாறு வியாபாரிகள் தெரிவித்தனர்.