தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். அந்த வகையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் சுற்றுப்பயணம், தேர்தல் பரப்புரை என தீவிரம் காட்டி வருகின்றனர். மற்றொருபுறம் சட்டப்பேரவை தேர்தலுக்குத் தேர்தல் ஆணையம் முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதற்கான பணிகளும் தொடங்கியுள்ளன. 

Advertisment

அதே சமயம் வழக்கமாக வாக்குப்பதிவின் போது தேர்தல் ஆணையத்தின் தேர்தல் பணிகளில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். இந்நிலையில் வாக்குச்சாவடி நிலை அலுவல்களாக அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்கள், தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்ட பணியாளர்களைப் பயன்படுத்திக் கொள்ள இந்தியத் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாகத் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். 

அதில், “வாக்குச் சாவடி அலுவலர்களாக மத்திய மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை நியமனம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிக்கு வர இயலாத நிலை ஏற்பட்டால் வாக்குச்சாவடி அலுவலாக அலுவலர்களாகத் தேர்தல் பணியில் அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்கள் தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்ட பணியாளர்களைப் பயன்படுத்திக் கொள்ளத் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.