இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் உத்தரப் பிரதேசம். யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு மாநிலத்தை ஆட்சி செய்து வருகிறது. நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் உள்பட பல்வேறு குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதைத் தடுக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் குற்றங்கள் குறைந்த படியில்லை. இந்த நிலையில், தான் தற்போது ஜவுளி வியாபாரி ஒருவரை பட்டபகலில் சுட்டுக் கொள்ளும் வீடியோ ஒன்று வெளியாகி மாநிலத்தை பரபரப்படுத்தியிருக்கிறது.
மீரட்டு மாவட்டம் ரத்னா வாலி காலி கிராமத்தைச் சேர்ந்தவர் 25 வயதான அதில் என்பவர். ஜவுளி வியாபாரம் செய்து வந்த இவர், காலை வீட்டை விட்டு வெளியே கிளம்பி மாலை வீடு திரும்புவதை வழக்கமாக வைத்திருந்தார். இந்த சூழலில் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வேலை முடிந்து வீட்டுக்கு வந்த அதிலை, அவரது நண்பர்கள் இருவர் வெளியே அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், இரவு நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால், பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. உடனே உறவினர்கள், குடும்பத்தார்கள் என பலரும் அதிலைத் தேட ஆரம்பித்துள்ளனர். ஆனால், அங்கு தேடியும் அதில் கிடைக்காமலாகதால், அக்டோபர் 1 ஆம் தேதி லிசாதி கேட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் அதிலைத் தீவிரமாகத் தேடிவந்தனர். இந்த நிலையில்தான், நர்ஹெடா கிராமத்தில் உள்ள ஒரு காட்டுப் பகுதியில் இளைஞர் ஒருவரின் உடல் சடலமாகக் கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக லிசாதி கேட் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த ஆணின் சடலம் காணாமல் போன அதில் எனபது தெரியவந்தது. மேலும் அதிலின் உடலில் பலத்த காயங்களுடன் தோட்டா குண்டு பாய்ந்திருந்தது. பின்னர் உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த சூழலில்தான் அதிலை மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் மூன்று முறை சுடும் வீடியோ ஒன்று வெளியாகியது. ஆனால் வீடியோவில் சுட்டுக் கொல்வது யார் என்று தெளிவாகத் தெரியவில்லை. அதனால் குற்றவாளி யார் என்று தெரியாமல் போலீசார் திணறிவந்தனர். மறுபுறம் மாநில சட்டம்-ஒழுங்கு குறித்து கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சியினர், வீடியோ வெளியான பிறகு காவல்துறை திணறி வருவதைச் சுட்டிக்காட்டி பேச ஆரம்பித்தனர். நிலமையின் தீவிரத்தை உணர்ந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தீவிரமாகத் தேடப்பட்டு வருகின்றனர்.
இதனிடையே அதிலை வீட்டில் இருந்து அழைத்துச் சென்ற இரு நண்பர்கள்தான் அவரை கொலை செய்தது தெரியவந்தது. ஆனால், அவர்கள் இருவரும் தலைமறைவாக இருந்தனர். இந்த நிலையில் இருவரும் நர்ஹெடாவில் பதுங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் அந்தப் பகுதியைச் சுற்றிவளைத்த போலீசார் இருவரையும் சரண்டர் ஆகும்படிக் கூறியுள்ளனர். ஆனால், அவர்கள் போலீசாரை நோக்கி சுட்டுவிட்டு தப்பியோட முயன்றபோது, காவல்துறையினர் சுட்டதில் சுல்கமரின் காலில் குண்டடிபட்டு கீழே சுருண்டு விழுந்துள்ளார். ஆனால், மற்றொரு நபரான ஹம்சா அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
பின்னர் சுல்கமரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், "வீடியோவில் அதிலை சுடுவது நான் தான். ஆனால், அதில் ஹம்சாவால் ஏற்கனவே கொல்லப்பட்டிருந்தார். என்னை முதன்மை குற்றவாளியாகக் காட்ட, அந்த வீடியோ பதிவு செய்யப்பட்டது. ஹம்சாவும் அதிலும் நண்பர்கள். ஹம்சாவின் பெண் நண்பருடன் அதில் பேசியதாலும், பழைய பகை காரணமாகவும் இந்தக் கொலை நடந்துள்ளது. முதலில் அதிலுடன் நான் மற்றும் ஹம்சா இருவரும் சேர்ந்து மது அருந்தினோம். பிறகு ஹம்சா அதிலை அடித்துக் கொன்றான். பிறகு என்னிடம் 'நீ சுடு, நான் அதை வீடியோ எடுக்கிறேன்' என்று கூறியதால் சுட்டேன்" என்று ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து விளக்கமளித்த மாவட்ட எஸ்.எஸ்.பி. விபின் தடா, "விரைவில் தலைமறைவாக இருக்கும் ஹம்சாவை கைது செய்து உரிய தண்டனை பெற்றுத் தரப்படும்" என்று உறுதியளித்துள்ளார். இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.