Advertisment

ஏஐ மாநாட்டில் காட்சிப்படுத்தப்பட்ட சீன ரோபோ; சர்ச்சையில் சிக்கிய உ.பி பல்கலைக்கழகம்

chinarobo

UP University in controversy for Chinese robot displayed at Delhi AI conference

தலைநகர் டெல்லியில் பாரத் மண்டபத்தில் பிப்ரவரி 16ம் தேதி ஏஐ ( செயற்கை நுண்ணறிவு) உச்சி மாநாட்டைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த மாநாடு வருகின்ற 20 ம் தேதி வரை என 5 நாட்கள் நடைபெற இருக்கிறது.

Advertisment

இதுவரை நடைபெற்ற நான்கு உலகளாவிய ஏஐ உச்சிமாநாடுகளில், இந்திய AI தாக்க உச்சிமாநாடு மிகப்பெரியதாகக் கருதப்படுகிறது. இதில் 15 முதல் 20 அரசாங்கத் தலைவர்கள், 50 க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் மற்றும் 40 க்கும் மேற்பட்ட உலகளாவிய மற்றும் இந்திய நிறுவனங்களின் பிரதிநிதிகள் உட்பட 100க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்றுள்ளனர் என்று கூறப்படுகிறது. ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரிகள் உட்பட உலகளாவிய ஏஐ சுற்றுச்சூழல் அமைப்பிலிருந்து சுமார் 500 முன்னணி நபர்களும் கலந்து கொண்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில், இந்த மாநாட்டில், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் உள்ளிட்ட முக்கிய  தொழில்நுட்ப தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.

Advertisment

இந்த மாநாட்டின் போது கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, பிரதமர் நரேந்திர மோடியைச்  சந்தித்து ஏஐ தொழில்நுட்பம் குறித்து விளக்கம் அளித்தார். அதில், இந்திய மாணவர்கள் மற்றும் ஐடி ஊழியர்களுக்குப் பயன் தரும் வகையில் கூகுள் மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்தும் தெளிவுபடுத்தினார். இந்த மாநாட்டுடன், ஏஐ தாக்க கண்காட்சியும் நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில், கூகுள், மெட்டா மற்றும் அமேசான் போன்ற தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் ஏஐயின் புதுமைகளைக் காட்சிப்படுத்தியுள்ளன.

அந்த வகையில் உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவில் உள்ள கால்கொடியாஸ் பல்கலைக்கழகம் அரங்கு ஒன்றரை அமைத்து, அதில் ரோபோ நாய் ஒன்றைக் காட்சிப்படுத்தியிருந்தது. அந்த அரங்கிற்கு வருபவர்களிடம் பல்கலைக்கழகத்தினர் ரோபோ நாய் குறித்து விளக்கம் அளித்து வந்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி பலரது கவனத்தையும் ஈர்த்தது. இந்த ரோபோவை தங்கள் பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கியதாக கால்கொடியாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர்கள் கூறியதாகக் கூறப்பட்ட நிலையில், அந்த ரோபோ நாய் சீனாவின் யூனிட்ரீ கோ2 தயாரிப்பு என்று தெரிய வந்ததால், இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கடும் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “இந்த மாநாட்டில் இந்தியத் திறமைகள் மற்றும் தரவுகள் பயன்படுத்தப்படாமல், இந்த மாநாடு ஒழுங்கற்ற முறையில் நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில், சீனாவின் தயாரிப்புகளும் இங்குக் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டையடுத்து, அந்த பல்கலைக்கழகம் ஏஐ மாநாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது. இது குறித்து கால்கொடியாஸ் பல்கலைக்கழகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது, “நடந்த சம்பவத்திற்கு மனப்பூர்வமான மன்னிப்பைக் கேட்டுக்கொள்கிறோம். அரங்கில் இருந்த எங்கள் பிரதிநிதிகளுக்கு இது பற்றிய முழுமையான தகவல்கள் தெரியவில்லை. அதனால், அவர்கள் தவறான கருந்துளை கூறிவிட்டனர். மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, நாங்கள் இந்த மாநாட்டிலிருந்து வெளியேறுகிறோம். இந்த ரோபோவை நாங்கள் தயாரித்ததாகக் கூறவில்லை. இந்த ரோபோ சீன நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்டது. இது முழுக்க முழுக்க கல்வி சார்ந்த பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது” என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த சீன யூனிட்ரீ கோ2 ரோபோ நாயின் சிறப்பம்சங்களாக, மிகக் குறைந்த விலையில், அதாவது தோராயமாக ரூ. 1.45 லட்சம் முதல் ரூ. 2.45 லட்சம் வரையிலான விலையில் இருக்கும். இந்த வகை ரோபோக்களில் இரண்டு வகைகள் உள்ளது. இந்த ரோபோக்களை ரிமோட் அல்லாமல் குரல் (வார்த்தைகள்) மூலமாகவே கட்டுப்படுத்த முடியும் என்றும், மொபைல்கள் மூலமாகத் தொலைதூரத்திலிருந்து கட்டுப்படுத்த முடியும் என்றும் கூறப்படுகிறது. இது ஹெச்டி (HD) தரத்தில் நிகழ் நேரப் படப் பரிமாற்றத்திற்கு உதவும் என்றும் கூறப்படுகிறது.

AI Delhi uttar pradesh summit
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe