உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களில் ஒவ்வொரு ஆண்டின் ஜூலையில் இருந்து ஆகஸ்ட் வரையிலான கன்வார் யாத்திரையை இந்துக்கள் மேற்கொண்டு வருகிறார்கள். உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்வார் உள்ளிட்ட புனித தலங்களுக்குச் சென்று கங்கை நீரை எடுத்து வந்து தங்கள் ஊர்களில் உள்ள சிவன் கோவில்களில் அபிஷேகம் நடத்துவார்கள். இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட தூரம் நடந்து செல்வார்கள்.
அந்த வகையில், இந்தாண்டின் கன்வார் யாத்திரை கடந்த ஜூலை 11ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கடந்தாண்டைப் போல இந்தாண்டும் கன்வார் யாத்திரை செல்லும் வழித்தடத்தில் உள்ள அனைத்து உணவகங்களிலும் உரிமையாளர்களின் பெயர்களை காட்சிப்படுத்தும் வகையில் பலகைகள் வைக்க வேண்டும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார். கடந்தாண்டு இந்த வழிகாட்டு முறைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது. ஆனால், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறி யோகி ஆதித்யநாத் நடந்து கொள்வதாக காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகளிடம் இருந்து மட்டுமல்லாமல், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்டிரிய லோக் தளம் ஆகிய கட்சிகள் கூட எதிர்ப்பு தெரிவித்தன. இந்த விவகாரம் அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில், கன்வார் யாத்திரைக்குப் பதிலாக படிப்பில் கவனம் செலுத்துங்கள் என மாணவர்கள் முன்னிலையில் பாடியதால் ஆசிரியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம், பகேரி பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ராஜ்நீஷ் கங்க்வார் என்பவர் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் பள்ளியில் நடந்த காலை வழிபாடின் போது மாணவர்கள் முன்னிலையில் பாடல் ஒன்றை பாடினார். அதில் அவர், ‘கன்வார் நோக்கி செல்லாதே, அதற்கு பதிலாக அறிவின் விளக்கை ஏற்று’ என்று படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பாடியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
இந்த பாடல் குறித்து கருத்து தெரிவித்த சில இணையவாசிகள், ஆசிரியரின் பாடலுக்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால் இவர் பாடிய பாடல், இந்து மதத்தை அவமதிப்பதாகவும், மதக் கலாச்சாராத்தை அவமதிப்பதாகவும் கூறி இந்து அமைப்பினர் உள்ளிட்ட வலதுசாரி அமைப்பினர் போர்க் கொடி தூக்கியுள்ளனர். மேலும், மஹாகல் சேவா சமிதி என்ற இந்து அமைப்பும், இந்து மதத்தை அவமதிக்கும் நோக்கத்தில் பாடியதாகக் கூறி ஆசிரியர் ராஜ்நீஷ் கங்க்வார் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில், அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக ஆசிரியரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து ஆசிரியர் ராஜ்நீஷ் கங்க்வார் தெரிவித்துள்ளதாவது, ‘பல ஆண்டுகளாக இந்த பள்ளியில் பணியாற்றி வருகிறேன். யாருடைய மத நம்பிக்கைகளையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. கல்வியில் கவனம் செலுத்த மாணவர்களை ஊக்குவிக்க மட்டுமே நான் விரும்பினே. பாடலில் மதத்திற்கு எதிரானது எதுவும் இல்லை. இந்த வீடியோ பழையது. சர்ச்சையை ஏற்படுத்துவதற்காக இந்த மாதத்தில் வேண்டுமென்றே பரப்பப்பட்டுள்ளது’ என்று கூறினார்.