உத்தரப் பிரதேசம் மாநிலம் கான்பூரைச் சேர்ந்த 22 வயதான சூரஜ் குமார் உத்தம், எலக்ட்ரீஷனாகப் பணியாற்றி வருகிறார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 20 வயதான அகன்ஷாவிற்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. இதனைத் தொடர்ந்து, இருவரும் தனியாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, திருமணம் செய்துகொள்ளாமல் 'லிவிங் டு கெதர்' முறையில் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், அகன்ஷாவின் தாயார், தனது மகளைக் காணவில்லை என்று கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், சூரஜ் குமார் என்ற இளைஞர்தான் தனது மகளைக் கடத்திச் சென்றிருப்பார் என்றும் கூறியுள்ளார். முதலில், அகன்ஷா காதலுடன் சென்றிருப்பார் என்று போலீசார் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், அகன்ஷாவின் தாயார் இந்த விவகாரம் குறித்து காவல் ஆணையர் வரை சென்று புகார் அளித்திருக்கிறார்.
ஆணையரின் உத்தரவைத் தொடர்ந்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். முதற்கட்டமாக, பெண்ணின் காதலன் சூரஜ் குமாரைப் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, "என்னுடன் தான் இருந்தார், அதன்பிறகு எங்கு சென்றார் என்று தெரியவில்லை" என்று கூறியுள்ளார். சூரஜ் குமாரின் பேச்சில் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. பின்னர் போலீசார் தங்களது பாணியில் விசாரிக்கத் தொடங்கியதும், அவர் அனைத்து உண்மைகளையும் வெளியே சொல்லியுள்ளார்.
அதில், சூரஜ் குமார் - அகன்ஷா இருவரது காதலுக்கு, பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதனால், அகன்ஷா வீட்டிலிருந்து வெளியேறி, காதலன் சூரஜ் குமாருடன் சேர்ந்து ஹனுமந்த் விஹாரில் வீடு எடுத்து, திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில், சூரஜ் குமாருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. அதன் காரணமாக, சூரஜ் குமார் மணிக்கணக்கில் செல்போனில் பேசி வந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த அகன்ஷா, காதலன் சூரஜ் குமாரிடம் இதுகுறித்து கேட்க, அவ்வப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும், அந்தப் பெண்ணுடன் பழகுவதைக் கைவிட்டு, தன்னை முறைப்படி திருமணம் செய்துகொள்ளுமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், இதற்கு சூரஜ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ஜூலை 21-ம் தேதி, சூரஜ் குமாருக்கும் காதலி அகன்ஷாவிற்கும் இது தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த சூரஜ் குமார், தனது காதலி என்று கூடப் பார்க்காமல், சரமாரியாகத் தாக்கி, தலையைச் சுவற்றில் மோதி, கழுத்தை நெரித்து கொடூரமாகக் கொலை செய்துள்ளார். அதன்பின்னர், கொலையை மறைப்பதற்காக, நண்பர் ஆஷிஷ் குமாரின் உதவியை நாடியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, இருவரும் சேர்ந்து அகன்ஷாவின் உடலை ஒரு பெரிய சூட்கேசில் அடைத்து, அங்கிருந்து சுமார் 100 கி.மீ. தொலைவில் உள்ள யமுனா நதியில் வீசியுள்ளனர் என்பது தெரியவந்தது. மேலும், நதியில் வீசுவதற்கு முன்பு, காதலியின் உடலுடன் சூரஜ் குமார் ஒரு செல்ஃபி வீடியோவையும் எடுத்திருக்கிறார்.
இதையடுத்து, செல்ஃபி வீடியோ எடுத்த செல்போனைப் பறிமுதல் செய்த போலீசார், சூரஜ் குமாரைக் கைது செய்தனர். கொலையை மறைக்க உதவியாக இருந்த ஆஷிஷ் குமாரையும் கைது செய்த போலீசார், இருவரிடமும் விசாரணை நடத்தி, சிறையில் அடைத்துள்ளனர். மேலும், நதியில் வீசப்பட்ட அகன்ஷாவின் உடலையும் போலீசார் தேடி வருகின்றனர்.
'லிவிங் டு கெதர்' முறையில் இருந்த தனது காதலியை, காதலனே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், இரண்டு மாதங்களுக்குப் பிறகு வழக்கின் முக்கிய குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டதற்கு, காவல்துறையினருக்கு பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.