லிவ்-இன் உறவில் இருந்தால் 50 துண்டுகளாக காணப்படுவீர்கள் என அந்த உறவுகளின் ஆபத்து குறித்து அடுத்தடுத்த நாட்களில் உத்தரப் பிரதேச ஆளுநர், பெண்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் பாலியாவில் உள்ள ஜனநாயக் சந்திரசேகர் பல்கலைக்கழகத்தின் 7வது பட்டமளிப்பு விழா நேற்று முன்தினம் (07-10-25) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். அதனை தொடர்ந்து பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து ஆளுநர் ஆனந்திபென் படேல் பேசினார்.
அதில் அவர் பேசியதாவது, “லிவ்-இன் உறவுகளின் விளைவுகளை நீங்கள் காண விரும்பினால், ஒரு அனாதை இல்லத்திற்குச் சென்றால் போதும். அங்கு15 முதல் 20 வயதுக்குட்பட்ட பெண்கள் தங்கள் கைகளில் ஒரு வயது குழந்தைகளுடன் வரிசையில் நிற்கிறார்கள். இந்த உறவை நான் கடுமையாக கண்டிக்கிறேன். இந்தப் போக்கு பேராசையிலிருந்து உருவாகிறது. அவர்கள் (ஆண்கள்) இளம் பெண்களை ஹோட்டல்களுக்கு அழைத்துச் செல்கிறார்கள், அவர்களை கவர்ந்திழுக்கிறார்கள். ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கிறார்கள். பின்னர், அவர்களை கைவிடுகிறார்கள். இவை நமது மதிப்புகள் அல்ல, ஆனாலும் அவை நடந்து கொண்டிருக்கின்றன. இது போன்ற விஷயங்களுக்கு இரையாகாமல் தங்கள் வாழ்க்கையை உன்னதமான இலக்குகளுக்கு பெண்கள் அர்ப்பணிக்க வேண்டும். பெண் குழந்தைகளைப் பாதுகாப்பது நமது பொறுப்பு. இது போன்றா தவறான விஷயங்கள் அவர்களுக்கு தொடர்ந்து நடந்து வருகிறது” எனப் பேசினார்.
லிவ்-இன் உறவு குறித்து இவர் பேசியது சர்ச்சையான நிலையில் அடுத்த நாளே இது போன்ற கருத்துக்களை கூறி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தினார். வாரணாசியில் உள்ள மகாத்மா காந்தி காசி வித்யாபீடத்தின் 47வது பட்டமளிப்பு விழா நேற்று (08-10-25) நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற அம்மாநில ஆளுநர் ஆனந்திபென் படேல், பட்டம் பெற்ற மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர், “எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன்பு மகள்கள் கவனமாக சிந்திக்க வேண்டும். லிவ்-இன் உறவுகளில் இருந்தும், சுரண்டல்களுக்கு வழிவகுக்கும் சூழ்நிலைகளில் இருந்து விலகி இருக்க வேண்டும். நமது மகள்களுக்கு சொல்ல ஒரே ஒரு செய்தி உள்ளது. லிவ்-இன் உறவுகள் இப்போது பிரபலமாக இருக்கலாம். ஆனால் அதைச் செய்யாதீர்கள். உங்கள் வாழ்க்கையைப் பற்றி நீங்களே முடிவுகளை எடுங்கள். என்ன நடக்கிறது என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள், நீங்கள் 50 துண்டுகளாகக் காணப்படுவீர்கள். கடந்த 10 நாட்களில் இதுபோன்ற வழக்குகளை பற்றிய அறிக்கைகளைப் பெற்று வருகிறேன். அவற்றை நான் பார்க்கும் ஒவ்வொரு முறையும், நமது மகள்கள் ஏன் இதை தேர்வு செய்கிறார்கள் என்று யோசிப்பது எனக்கு வேதனையாக இருக்கிறது. பாதிக்கப்பட்ட சிறுமிகளை நேரில் சந்தித்தேன். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு சோகமான மற்றும் தனித்துவமான கதை இருக்கிறது. ஒரு நீதிபதியுடனான சந்திப்பின் போது அவரும் பெண்கள் மீது அக்கறை கொண்டு பேசினார். லிவ்-இன் உறவுகளுக்கு இரையாகாமல் தடுக்க மாணவிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு அனைத்து பல்கலைக்கழகங்களையும் வலியுறுத்தினார்” என்று கூறினார்.