சாதியைக் குறிக்கும் வகையில் பெயர், அடையாளங்களை நீக்க வேண்டும் என உத்தரப் பிரதேச மாநில அரசு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
சாதியைப் புகழ்வது தேச விரோதமானது மற்றும் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது, எனவே சாதிய அடையாளங்களை நீக்க வேண்டும் என அலகாபாத் உயர் நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு ஒன்றை வழங்கியது. அந்த தீர்ப்பின்படி உத்தரப் பிரதேச தலைமைச் செயலாளர் தீபக் குமார், அனைத்து அரசுத் துறைகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், காவல் நிலைய அறிவிப்புப் பலகைகள், கைது குறிப்புகள், முதல் தகவல் அறிக்கைகள், பிற காவல் ஆவணங்களில் இனி சாதியை குறிப்பிடக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக, பெற்றோர் பெயர்கள் அடையாளத்திற்காகப் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, வாகனங்கள் மற்றும் அடையாளப் பலகைகளில் இருந்து சாதி ஸ்டிக்கர்கள், சின்னங்கள், கோஷங்கள் மற்றும் உடனடியாக அகற்ற வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், சாதி அடிப்படையிலான ஊர்வலங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளன. சாதி அடையாளம் என்பது சட்டப்பூர்வத் தேவையாக இருக்கும் பட்சத்தில் பட்டியல் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைகளைத் தடுக்கும் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் இந்த உத்தரவு பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு குறித்து கருத்து தெரிவித்த சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில், ‘5,000 ஆண்டுகளாக மனதில் வேரூன்றிய சாதி சார்புகளை அகற்ற என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? உடைகள், சின்னங்கள் அல்லது ஒருவரின் பெயருக்கு முன் சாதியைக் கேட்கும் மனநிலை மூலம் பாகுபாடு காட்டுவது எப்படி?. சாதி காரணமாக ஒருவரை அவர்களின் வீட்டைக் கழுவ கட்டாயப்படுத்துவது அல்லது பொய்யான சாதி சார்ந்த குற்றச்சாட்டுகளால் மக்களை அவதூறு செய்யும் சதித்திட்டங்கள் போன்ற நடைமுறைகளை தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.